/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பெரியகிணறு துார்வாரும் பணி துவக்கம்: 'தினமலர்' செய்தி எதிரொலி
/
பெரியகிணறு துார்வாரும் பணி துவக்கம்: 'தினமலர்' செய்தி எதிரொலி
பெரியகிணறு துார்வாரும் பணி துவக்கம்: 'தினமலர்' செய்தி எதிரொலி
பெரியகிணறு துார்வாரும் பணி துவக்கம்: 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : மே 06, 2024 12:00 AM

பொள்ளாச்சி:'தினமலர்' செய்தி எதிரொலியாக, நாச்சிமுத்து வீதி பெரிய கிணறு துார்வாரும் பணி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
பொள்ளாச்சி நாச்சிமுத்து வீதியில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் பின்புறம், துார்வாரப்படாத கிணறு உள்ளது. இந்த கிணறை, பொதுமக்கள், 'பெரிய கிணறு' என்றழைக்கின்றனர்.
இந்த கிணற்றில் இருந்து தான், 70 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதி முழுமைக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில் கிணறு போதிய பராமரிப்பின்றி இருந்தது.
தற்போது இந்த கிணற்றில் இருந்து தான், கரியகாளியம்மன் வீதி, குட்டை வீதி, நாச்சிமுத்து வீதி மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் உப்பு நீர் (மாற்று பயன்பாட்டுக்காக) வினியோகம் செய்யப்படுகிறது.
கிணற்றின் மேல் போடப்பட்டு உள்ள கம்பி வலை பிய்ந்து, துருப்பிடித்து உள்ளதுடன், விஷ பூச்சிகளின் இருப்பிடமாக உள்ளது. புதர் மண்டிக்காணப்படுவதால், இலை, தழைகள் உதிர்ந்து கிணற்றில் விழுந்து கிடந்தன.
குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பல்புகளையும் கிணற்றில் வீசி குப்பை கொட்டும் இடமாக மாற்றி இருந்தனர்.
கிணற்றை துார்வார வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த மாதம், 27ம் தேதி படத்துடன், 'அந்தோ பரிதாபம்' என்ற தலைப்பில் கிணற்றை துார்வார வேண்டும் என செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நகராட்சி சார்பில் நேற்று முதல் கிணறு துார்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. கிணற்றில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு, கழிவுகள், பாட்டில்கள் போன்றவை அகற்றப்பட்டன.
அதிகளவு கிணற்றில் மதுபாட்டில்கள் கிடந்தன; அவற்றை அகற்றிய நிலையில், மற்ற கழிவுகள் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஊற்று போல வரும் நீர்
நாச்சிமுத்து வீதி கிணறு துார்வாரும் சூழலில், கிணற்றில் ஆங்காங்கே இருந்து ஊற்று போல நீர் கொட்டுவதை கண்ட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். வறட்சியான காலத்திலும், கிணற்றில் நீர் ஊற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக, அவர்கள் தெரிவித்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்ட கலெக்டர், கிணறுகளை துார்வார உத்தரவிட்டார். அதன்படி, நகராட்சி பகுதியில் உள்ள சி.டி.சி., காலனி கிணறு, நாச்சிமுத்து வீதி கிணறுகள் துார்வாரப்படுகின்றன. இங்குள்ள கழிவுகள் அகற்றப்பட்டு கிணறு சுற்றிலும் சுவர் கட்டப்பட்டு, கம்பி வலை புதியதாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன,' என்றனர்.