பதிவு பணியில் இருந்து 21 சார் - பதிவாளர்கள் மாற்றம்
பதிவு பணியில் இருந்து 21 சார் - பதிவாளர்கள் மாற்றம்
PUBLISHED ON : ஆக 28, 2026 06:39 AM
சென்னை: தமிழகம் முழுதும், 40க்கும் மேற்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை நடத்தியது. இது தொடர்பாக, 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை இடமாற்றம் செய்ய, பதிவுத் துறை முடிவு செய்தது. அதற்காக சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள் என, 40 பேர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இவர்களை காப்பாற்ற, பிற துறை அமைச்சர்களிடம் இருந்து சிபாரிசு வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, நமது நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சார் - பதிவாளர்கள் இடமாறுதலுக்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, சேலம், திருப்பத்துார், திருவள்ளூர், கரூர், திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலுார் மாவட்டங்களை சேர்ந்த, 21 சார் - பதிவாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும், பதிவு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, பதிவு அல்லாத பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதே போன்று, உதவியாளர்களையும் பதிவு பணியில் இருந்து விடுவிக்கும் உத்தரவு தனியாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
