PUBLISHED ON : பிப் 20, 2026 03:53 AM

சென்னை: தேர்வெழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சொல்வதை எழுதும் வகையில் நியமிக்கப்படும், 'ஸ்கிரைப்' ஆக, கல்லுாரி மாணவர்களை நியமிப்பதில், குளறுபடிகள் நிலவியது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மீண்டும் பழையபடியே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், தேர்வு எழுத முடியாத வகையில், உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டோர், சொல்வதை எழுதும் வகையில், 'ஸ்கிரைப்' எனும் உதவியாளர்களாக, ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு, இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லுாரி மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை, 'ஸ்கிரைப்' ஆக நியமிக்க வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டது.
ஆனால், 'ஸ்கிரைப்' ஆக, அவர்கள் பணியாற்ற விரும்பவில்லை. இது குறித்து, கடந்த 16ம் தேதி நம் நாளிதழில், 'ஸ்கிரைப்களை தேடி, கல்லுாரிகளுக்கு படையெடுக்கும் தலைமை ஆசிரியர்கள்' என்ற தலைப்பில், செய்தி வெளியானது.
இதையடுத்து, மீண்டும் பழையபடியே ஆசிரியர்களே ஸ்கிரைப் ஆக செயல்படலாம் என, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
