PUBLISHED ON : ஆக 08, 2026 05:02 PM

திருப்புவனம்:திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் பஸ் ஸ்டாப்பில் ஆதரவின்றி இருந்த முதியவருக்கு தினமலர் செய்தியால் தன்னார்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் காரில் வரும் சிலர் பராமரிக்க முடியாத முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டோரை சாலையோரம் உள்ள பஸ் ஸ்டாப், கோயில்கள் அருகே இறக்கி விட்டு செல்கின்றனர்.
தங்களைப் பற்றி எந்த விவரமும் சொல்லத் தெரியாமல் பஸ் ஸ்டாப்பில் அக்கம் பக்கத்தினர் கொடுக்கும் உணவை உண்டு ஒரே இடத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் ,பெரம்பூர் ஊரைச் சேர்ந்த பாரதிமோகன் என்ற தன்னார்வலர் பஸ் ஸ்டாப்பில் தஞ்சம் அடைந்த முதியவரை மீட்டு அவரை குளிக்க வைத்து புத்தாடை அணிவித்துள்ளார்.
பாரதிமோகன் கூறுகையில்,
18 வருடங்களாக ஆதாரவற்று இருப்பவர்களை மீட்டு அவர்களுக்குரிய காப்பகங்களில் அனுமதித்து வருகிறோம். ராமேஸ்வரத்தில் மனநலம் குன்றியவரை மீட்டு காப்பகத்தில் சேர்க்கும் பணியில் இருந்தபோது, பஸ் ஸ்டாப்பில் முதியவர் கிடப்பதாக தகவல் வந்தது.
எனவே அவரை பரிசோதனை செய்தோம், ஒரே இடத்தில் இருந்ததால் உடல் முழுவதும் புண் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரை சுத்தம் செய்து குளிக்க வைத்து புதிய உடைகளை அணிவித்துள்ளோம். இவருக்கு சிறிது நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவை, அதன்பின் தான் காப்பகங்களில் ஒப்படைக்க முடியும். எனவே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.
