/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
நீர்நிலையில் காலாவதியான மருத்துவ கழிவுகள் அகற்றம்
/
நீர்நிலையில் காலாவதியான மருத்துவ கழிவுகள் அகற்றம்
PUBLISHED ON : அக் 26, 2025 12:00 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நீர்நிலையில் குவிக்கப்பட்டிருந்த, காலாவதியான மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டன. 'உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுற்றுச்சூழல் துறையினர் தெரிவித்தனர்.
கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில், தேர்வழி சுடுகாடு எதிரே உள்ள கால்வாய் மதகு பகுதியில், மருத்துவ கழிவுகள் குவிக்கப்பட்டிருந்தன.
இதனால், அடுத்தடுத்து உள்ள நீர்நிலைகள் பாதித்து, மக்கள் மட்டுமின்றி, கால்நடைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் சார்பில், இரு நாட்களாக மருத்துவ கழிவுகளை அற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பத்து பேர் கொண்ட குழுவினர், வலை போட்டு மருத்துவ கழிவுகளை அகற்றி, அவற்றை மூட்டைகளாக கட்டினர். மொத்தம், 1 டன் மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நீர்நிலையில் இருந்து அகற்றப்பட்ட மருந்து, மாத்திரைகள் அனைத்தும், 10 ஆண்டுகளுக்கு முன் காலாவதியானவை என்பது தெரியவந்தது.
சமீபத்தில், கோவை அருகே வடவள்ளி, தொண்டாமுத்துார் பகுதிகளில் காலாவதியான மருந்துகள் திறந்தவெளியில் கொட்டப்பட்டதால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது.
இதை தொடர்ந்து, மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து மொத்த வியாபாரிகளும், காலாவதியான மருந்து, மாத்திரைகளை சரியான முறையில் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியது.
அதை மீறும் வகையில், கும்மிடிப்பூண்டியில் நீர்நிலையில் மருத்துவ கழிவுகள் குவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் கூறுகையில், 'நீர்நிலையில் அகற்றப்பட்ட மருத்துவ கழிவுகளின் பேட்ஜ் நம்பர்களை ஆய்வு செய்து வருகிறோம்.
அதன் வாயிலாக, மருத்துவ கழிவை கொட்டியவர்களை கண்டறிந்து, விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.

