/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் எதிரொலி : வடபழனி முருகன் கோவிலில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
/
தினமலர் எதிரொலி : வடபழனி முருகன் கோவிலில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
தினமலர் எதிரொலி : வடபழனி முருகன் கோவிலில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
தினமலர் எதிரொலி : வடபழனி முருகன் கோவிலில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
PUBLISHED ON : பிப் 10, 2025 12:00 AM
வடபழனி:சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வடபழனி முருகன் கோவிலும் ஒன்று. இங்கு, தினமும் இங்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
செவ்வாய், வார விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து செல்வர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலின் முகப்பு, வடபழனி ஆற்காடு சாலை, ஆண்டவர் தெருவில் உள்ளது. இந்த தெருவின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து, ஏராளமான கடைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை கண்டமேனிக்கு ஆங்காங்கே நிறுத்தி வந்தனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
தை கிருத்திகை நாளான, கடந்த 6ம் தேதியும் இதே நிலைமை தொடர்ந்தது. மாடவீதிகளிலும் நடைபாதை கடைகள், வாகனங்களின் ஆக்கிரமிப்பால் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், வரும் 11ம் தேதி தைப்பூசம் நிகழ்வு நடக்க உள்ளது. இதனால், கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவர். இதை மனதில் வைத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில் கடந்த 7ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மாநகராட்சி, ஹிந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் நடந்தது.
இதில், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்புகள் தொடராமல் இருக்க முறையாக கண்காணக்கவும், முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர் பெரியசாமி மற்றும் உதவி செயற் பொறியாளர் கோவிந்தசாமி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பாப் காட் இயந்திரம் உதியுடன், ஆண்டவர் தெரு, வடக்கு மற்றும் தெற்கு மாடவீதி, அம்மன் கோவில் தெரு என, வடபழனி கோவிலை சுற்றி உள்ள பூக்கடை, பழக்கடை உள்ளிட்ட நடைபாதை ஆக்கிரமிப்புகள் மற்றும் நடைபாதை வரை விரிவாக்கம் செய்யப்பட்ட கடைகளின் முகப்புகள் என, 70க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
அதுமட்டுமல்லாமல், கோவில் முகப்பில் இருந்து 50 மீட்டர் துாரம், 4 மீட்டர் அகலத்திற்கு சிமென்ட் கலவை கொட்டி ஒட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், 'தைப்பூசம் வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதற்காக மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆக்கரமிப்புகள் தொடராதபடி கண்காணித்து, உடனடியாக அகற்ற மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.