'தினமலர்' எதிரொலி :மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகை மீண்டும் அமைப்பு
'தினமலர்' எதிரொலி :மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகை மீண்டும் அமைப்பு
PUBLISHED ON : ஆக 13, 2026 04:11 PM

சேலையூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' பெயர் பலகை, மீண்டும் அதே இடத்தில் மீண்டும் நடப்பட்டது.
கடந்த 2014ல், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில், ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். அவரது தியாகத்தை போற்றும் வகையில், அவர் வசித்த பகுதி என்பதால், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என, தமிழக அரசு, கடந்தாண்டு ஜூனில் பெயர் சூட்டியது.
இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி நிர்வகிக்கும் அச்சாலையில், கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சந்திப்பு, சேலையூர், கேம்ப்ரோடு உட்பட பல இடங்களில், 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதில், கேம்ப்ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை, மர்ம நபர்கள் அடியோடு பிடுங்கி சாலையோரம் வீசினர். இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று காலை, சாலையோரம் வீசப்பட்ட பெயர் பலகையை எடுத்து, ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் நட்டனர்.
அதேநேரத்தில், இந்த பெயர் பலகையை அடியோடு பிடுங்கி வீசியவர்கள் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
