/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தடையில்லா மின்சாரம் வழங்க புதிய மின்பாதை துவக்கம்
/
தடையில்லா மின்சாரம் வழங்க புதிய மின்பாதை துவக்கம்
PUBLISHED ON : செப் 03, 2025 12:00 AM
திருத்தணி:வீடுகளுக்கு தடையில்லா மின்வினியோகம் செய்வதற்கு, கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்தில் புதிய மின்பாதை துவக்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்தில் இருந்து சிறுகுமி, புச்சிரெட்டிப் பள்ளி, கிருஷ்ணசமுத்திரம் மற்றும் பீரகுப்பம், எஸ்.அக்ரஹாரம், செருக்கனுார், மாம்பாக்கசத்திரம் போன்ற பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 7500க்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் உள்ளன.
இந்நிலையில், கிருஷ்ணசமுத்திரம், புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், சில மாதங்களாக குறைந்த அழுத்த மின்சாரம், மின்சப்ளை துண்டிப்பு மற்றும் மின்மாற்றிகள் பழுது ஏற்படுவதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்தது. மேலும் மழையின் போதும், பலத்த காற்று வீசினாலும், பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் படிப்பதில் சிரமம் ஏற்பட்டது. விவசாயிகளும் மின்மோட்டார்கள் இயக்க முடியாமல் தவித்து வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, திருவள்ளூர் மின்பகிர்மான துணை மின்நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து,கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்தில் இருந்து கிருஷ்ணசமுத்திரம், புச்சிரெட்டிப்பள்ளிக்கு தனியாக, புதிய மின்பாதை அமைக்க ஏற்பாடு செய்தனர்.
இதற்காக, 11 கி.வோ., திறன் கொண்ட புதிய மின்மாற்றி மூலம், 70 மின்கம்பங்கள் தனியாக நடப்பட்டன. நேற்று திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, புதிய மின்பாதையில் தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணசமுத்திரம், புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள, 20 கிராமங்களில் தடையின்றி சீரான மின்சாரம் வழங்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.