/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
வண்டலுார் மேம்பாலத்தில் சத்தம் தடுக்க சீரமைப்பு பணி துவக்கம்
/
வண்டலுார் மேம்பாலத்தில் சத்தம் தடுக்க சீரமைப்பு பணி துவக்கம்
வண்டலுார் மேம்பாலத்தில் சத்தம் தடுக்க சீரமைப்பு பணி துவக்கம்
வண்டலுார் மேம்பாலத்தில் சத்தம் தடுக்க சீரமைப்பு பணி துவக்கம்
PUBLISHED ON : செப் 20, 2025 12:00 AM

வண்டலுார்:வண்டலுார் மேம்பாலத்தின் உறுதித் தன்மை குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, சாலை இணைப்பு விரிவு பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்யும் பணிகள் நேற்று துவக்கப்பட்டன.
வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலையுடன் வாலாஜாபாத் சாலையை இணைக்கும் விதமாக, 2011ம் ஆண்டு, 27 கோடி ரூபாய் செலவில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டு, 2012ல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த பாலத்தின், மேல்பகுதி கட்டுமானத்தில், 'எக்ஸ்பன்ஷன் ஜாய்ன்டு' எனப்படும் இணைப்பு விரிவு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு சட்டங்கள் உடைந்ததால், வாகனங்கள் செல்லும் போது காதைப் பிளக்கும் சத்தம் உருவானது. இதையடுத்து, மேம்பாலத்தை ஆய்வு செய்த தமிழக நெடுஞ்சாலை அதிகாரிகள், கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி, இரும்பு சட்டங்களை சீர் செய்யும் பணியை துவக்கி, ஆகஸ்டில் பணியை முடித்தனர்.
இந்நிலையில், சரி செய்யப்பட்ட இரும்பு சட்டங்கள் மீண்டும் சேதமாகி, மேம்பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும் போது, மீண்டும் காதைப் பிளக்கும் சத்தம் உருவானது.
இது குறித்து நேற்று முன்தினம், நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக, தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மேம்பாலத்தை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, மேம்பாலத்தில் கான்கிரீட் சாலையுடன் பொருத்தப்பட்டுள்ள இரும்பு சட்டங்களை சரியாக இணைக்கும் பணியை, நேற்று மாலை மீண்டும் துவக்கினர். 'இந்த பணி ஒரு வார காலம் நடைபெறும்' என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.