அடையாறு ஆறு முகத்துவாரத்தில் மணல் திட்டு அகற்றுவது தொடக்கம்
அடையாறு ஆறு முகத்துவாரத்தில் மணல் திட்டு அகற்றுவது தொடக்கம்
PUBLISHED ON : ஜூன் 07, 2026 06:41 PM

அடையாறு: அடையாறு ஆறு முகத்துவாரத்தில் நீரோட்டத்திற்கு தடையாக மணல் திட்டுகள் இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மணல் திட்டுகள் அகற்றும் பணி தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், ஆதனுாரில் இருந்து, பட்டினம்பாக்கம் வரை உள்ள அடையாறு ஆறு, 42 கி.மீ., நீளம் உடையது. இடத்தை பொறுத்து, 50 முதல் 450 மீட்டர் அகலம் வரை உள்ளது.
ஆற்றுநீர் கடலில் சேரும் முகத்துவாரம் பகுதி பகுதி, 1 கி.மீ., அகலம் உடையது. இதில், 400 மீட்டர் அகலத்தில் ஆற்றுநீர், கடலில் நீருடன் சேரும் வகையில் நீரோட்டம் இருக்கும்.
அலையின்போது, ஆற்று நீருடன் கடல்நீர் கலப்பதால், 5 கி.மீ., துார ஆற்று நீரில், கொசுப்புழு உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டது.
மேலும், ஆகாய தாமரை வளர்ச்சி தடைபடுவதால், ஆற்று நீர் மாசு குறைந்தது. நீரோட்டம் இருக்கும்போது, ஆகாய தாமரையில் முட்டைபோடும் கொசுப்புழுக்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதற்காக, முகத்துவாரத்தில் மணல் திட்டுகளை அவ்வப்போது அகற்றி நீரோட்டம் சீராக பராமரிக்கப்பட்டது.
குறிப்பாக, பருவமழைக்குமுன், மே மாதத்தில் 400 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழத்தில் மணல் ஊறிஞ்சும் இயந்திரம் கொண்டு மணல் திட்டு அகற்றப்படும். இதர மாதங்களில், கடல் சீற்றத்தை பொறுத்து, தேவைப்படும் போது பொக்லைன் இயந்திரம் கொண்டு மணல் திட்டு அகற்றப்படும்.
ஆனால், கடந்த மாதம் இந்த பணி நடைபெறவில்லை. ஏற்கனவே வழங்கிய ஒப்பந்தம், ஏப்., மாதத்துடன் முடிந்ததால், 400 மீட்டர் அகலத்தில் 10 அடி உயரம் வரை மலை போல் மணல் குவிந்ததால், ஆற்று நீர் கடலில் சேரவில்லை.
முகத்துவாரத்தில் இருந்து கோட்டூர்புரம் வரை, கழிவுநீரால் நிரம்பி கொசு உற்பத்தி அதிகரித்தது. மேலும், ஆகாய தாமரை வளர்ந்து மக்கியதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசியது.
இதனால், நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருப்புகள் மற்றும் தெற்கு பகுதியில் உள்ள காந்தி நகர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்போர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நீர்வளத்துறை சார்பில், மணல் திட்டுகள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பராமரிப்பு நிதியில் இருந்து மணல் திட்டுகளை அகற்றி வருகிறோம். ஆற்று சீரமைப்புக்கெ தனியாக, விரைவில் நிதி ஒதுக்கப்படும். அப்போது முழுமையான பணி நடைபெறும். கடல் நீர் ஆற்று நீரில் கலக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
