/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
வழிகாட்டி பலகை அமைத்ததால் நிம்மதி; 'தினமலர்' செய்தி எதிரொலி
/
வழிகாட்டி பலகை அமைத்ததால் நிம்மதி; 'தினமலர்' செய்தி எதிரொலி
வழிகாட்டி பலகை அமைத்ததால் நிம்மதி; 'தினமலர்' செய்தி எதிரொலி
வழிகாட்டி பலகை அமைத்ததால் நிம்மதி; 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஆக 26, 2025 12:00 AM

வால்பாறை; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறையில், ஐந்து ரோடுகள் சந்திப்பில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டது.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை மலைப்பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆழியாறில் இருந்து வால்பாறை வரையான கொண்டைஊசி வளைவுகளில் எச்சரிக்கை பலகையும், குவி கண்ணாடிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால், சமீப காலமாக வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தடுக்கபட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறையில் இருந்து சோலையாறுடேம் செல்லும் ரோட்டில் உள்ள மாதா கோவில், ஐந்து ரோடுகள் சந்திக்கும் பகுதியில் வழிகாட்டி பலகை இல்லாததால் சுற்றுலா பயணியர் செல்லும் இடம் தெரியாமல் பரிதவித்தனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் மாணிக்கா எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பு, பழைய வால்பாறை உள்ளிட்ட இடங்களில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலா பயணியரும், வாகன ஓட்டுநர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மழை காரணமாக, வால்பாறையில் ரோடுகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக, ஆழியாறு முதல் வால்பாறை வரை பல்வேறு இடங்களில் மண் சரிந்துள்ளது.
இந்த பகுதியில் விரைவில் தடுப்புக்கம்பிகள் அமைக்கப்படும். அதே போல் மாதா கோவில் சந்திப்பு, பழைய வால்பாறை உள்ளிட்ட முக்கிய ரோடுகள் சந்திப்பு பகுதிகளில், பெரிய அளவில் வழிகாட்டி பலகை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.