PUBLISHED ON : ஆக 10, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி: சென்னை, பழவந்தாங்கலில் மட்டுமல்ல; தமிழகத்தின் பெரும்பான்மையான பள்ளிகள் அருகிலும் கஞ்சா தங்கு தடையின்றி கிடைக்கிறது. கஞ்சா விற்பனையை தமிழகஅரசும், காவல் துறையும்வேடிக்கை பார்ப்பது மிகவும்ஆபத்தானது. இனியும் அலட்சியம் காட்டாமல், கஞ்சாவை ஒழிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: தமிழக போலீசில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு இருப்பது போல், கஞ்சா ஒழிப்பு பிரிவு ஒன்றை தனியாக துவங்கினால் தான் சரிப்படுமோ என்ற, 'டவுட்'தான் வருது!
காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார்: எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிர்வாகிகளால் தான், கட்சி எழுச்சியாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக தன்னார்வத்துடன் செயல்பட்டு, கட்சிப் பணியாற்றி வருபவர்களால், கவுன்சிலராக கூட முடியவில்லை. அந்த நிர்வாகிகளின் உழைப்பு காரணமாக, 10 எம்.பி.,க்கள், 25 எம்.எல்.ஏ.,க்கள், 15 கவுன்சிலர் சீட்டுகளை வாங்குகிறோம். அதை அறுவடை செய்பவர்கள், கட்சிக்கு உழைத்தநிர்வாகிகளுக்கு எந்த உதவியும் செய்ய முன்வருவதில்லை; அவர்களை கண்டுகொள்வதும் இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.
டவுட் தனபாலு: 'திராவிட கட்சியினர் மாதிரி, நம்ம கட்சியின் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்களும் சம்பாதிக்கிறதுல, கொஞ்சத்தை கட்சியினருக்குசெலவு செய்யணும்...எல்லாத்தையும் அவங்களே தனியாளா சாப்பிடக் கூடாது' என்பதைத்தான் இப்படி நாசுக்கா சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி: சென்னை நங்கநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஆசிரியர், அம்மாணவனின் புத்தகப் பையை சோதனை செய்துள்ளார். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்து, போலீசில் புகார் செய்துள்ளார். அந்த கஞ்சா பொட்டலங்களை,மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், அந்த மாணவன் வாங்கியதாக வெளியான செய்திகள்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
டவுட் தனபாலு: 'ரயில் நிலையங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகின்றன... அங்க கஞ்சா விற்பனை நடக்கிறதுக்கும், மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை'ன்னு தமிழக அமைச்சர் ரகுபதி சால்ஜாப்பு சொன்னாலும் சொல்வார் என்பதில், 'டவுட்'டே இல்லை!

