PUBLISHED ON : ஜன 15, 2025 12:00 AM

தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் வேலு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பழனிசாமி அறிவித்திருக்கிறார். இப்படித்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல... பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு.
டவுட் தனபாலு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., புறக்கணித்திருப்பது, உங்களுக்கு நல்லது தானே... ஓட்டுக்கு கூடுதல் நோட்டுகளை இறைக்க வேண்டிய அவசியம் குறைஞ்சிட்டதால, அமைச்சர்களின் பாக்கெட் தப்பிடுச்சு
என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி: டில்லியில் கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையே, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் நிறைவேற்றவில்லை. அதை பற்றி கேட்டால்,
சம்பந்தமே இல்லாமல் வேறொரு விஷயத்தை பேசி, அவர் மழுப்புகிறார். எத்தனை நாளைக்கு தான் அவர் இப்படி ஓடி ஒளிய போகிறார்?
டவுட் தனபாலு: 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டை பாக்குக்கு விலை சொல்றார்'னு சொல்றீங்களா...? வாக்குறுதியை வாரி வழங்கி ஆட்சிக்கு வந்துட்டு, அதை நிறைவேற்றாம சமாளிப்பது எப்படின்னு, 'இண்டியா' கூட்டணியில இருக்கிற தி.மு.க.,விடம்
அரவிந்த் கெஜ்ரிவால் ஐடியா கேட்டிருப்பாரோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?
நடிகர் விஜயின் த.வெ.க., நிர்வாகிகள்: விஜயின் கடைசி படத்துக்கான படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடக்கிறது; ஏப்ரல் வரை நீடிக்கும். அதில் கவனம் செலுத்தும் அவர், அதுவரை கட்சியை வழிநடத்தும் பொறுப்பை, பொதுச்
செயலர் ஆனந்த், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், இருவருக்கும் இடையே, 'ஈகோ' யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் முழு நேர அரசியலுக்கு வந்தால், இதற்கு முடிவு ஏற்படும்.
டவுட் தனபாலு: 'ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்'னு இருந்தா எதுவுமே உருப்படாது... கட்சியின் முகமா இருப்பதே விஜய் தான்... டிரைவர் வச்சு காரை ஓட்டுறது மாதிரி, கட்சியையும் விஜய் கருதிட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது!