PUBLISHED ON : ஏப் 06, 2025 12:00 AM

தமிழக முதல்வர் ஸ்டாலின்: நம் கூட்டணி பயணத்தில், 2019 முதல் நாம் இணை பிரியாமல் இருக்கிறோம். ஏனெனில் நம் இலக்கு என்ன? நாம் யாரை, எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு இயங்குகிறோம். கூட்டாட்சி என்ற சொல்லே, இன்று மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜியாக உள்ளது. இந்திய அளவில் கூட்டாட்சிக்காக நாம் தொடர்ந்து போராடுகிறோம். ஆனால், இதற்கு எதிராக மத்திய அரசு உள்ளது.
டவுட் தனபாலு: மத்தியில் கூட்டாட்சிக்கு குரல் கொடுக்குறீங்களே... மாநிலத்தில், உங்க கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு குடுத்து, மாநில அளவில் கூட்டாட்சிக்கு முன்னுதாரணமாக நீங்க இருக்கலாமே... அதை செய்துட்டு, மத்திய அரசிடம் கூட்டாட்சி குறித்து குரல் எழுப்பினால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன்: 'தி.மு.க.,வில் இருக்கும் ஹிந்துக்கள் பொட்டு வைக்கக் கூடாது; கைகளில் கயிறு கட்டக் கூடாது' என்று அந்த கட்சியின் நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா பேசியுள்ளார். 'பொட்டு வைப்பவர்கள், கயிறு கட்டுவோர் ஓட்டுகள் எனக்கோ, தி.மு.க.,வுக்கோ தேவையில்லை' என, அவர் வெளிப்படையாக அறிவிப்பாரா?
டவுட் தனபாலு: ராஜா ஒன்றும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டாம்... அவருக்கு இதுவரை ஓட்டு போட்டு வந்த ஹிந்துக்கள், 'இனி இவருக்கு ஓட்டளிக்க மாட்டோம்' என்ற நிலைப்பாட்டை எடுத்தாலே, அடுத்த தேர்தலில் ராஜா காணாம போயிடுவார் என்பதில், 'டவுட்டே இல்லை!
விஸ்வ ஹிந்து பரிஷத் துணை பொதுச்செயலர் சந்திரசேகரன்: தி.மு.க., - எம்.பி., ராஜா, ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவருடைய பேச்சு, தி.மு.க.,வில் உள்ள ஹிந்துக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அனைத்து மதத்தவருக்கும் பொதுவானவராக செயல்பட வேண்டிய முதல்வர், இதை கண்டிக்காதது ஏன்? அப்படியென்றால், ராஜா கருத்தை முதல்வர் ஆதரிக்கிறாரா?
டவுட் தனபாலு: முதல்வரின் தந்தை கருணாநிதி, நெற்றியில் குங்குமத்துடன் வந்த தன் கட்சி எம்.பி.,யிடம், 'நெற்றியில் ரத்தம் வழிகிறதா' எனக் கேட்டவர்... இன்றைய முதல்வர் அப்படி கேட்பவர் இல்லை என்றாலும், ராஜாவை கண்டிக்காமல் விட்டால், அவரது கருத்தை முதல்வரும் ஆதரிக்கிறாரோ என்ற, 'டவுட்' வரத்தான் செய்யும்!

