PUBLISHED ON : ஆக 12, 2024 12:00 AM

காங்., கட்சியை சேர்ந்த, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்: ஆண்டுதோறும், கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு, 177 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும். நடப்பாண்டில் இதுவரை, 149 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எங்கள் கணிப்பின்படி, காவிரியில் தமிழகம் வழியாக நடப்பாண்டு, 71 டி.எம்.சி., தண்ணீர் வீணாககடலில் கலந்து உள்ளது.
டவுட் தனபாலு: என்னமோ, தாராள பிரபுவா தண்ணீர் திறந்து விட்ட மாதிரி பேசுறீங்களே... உங்க மாநில அணைகள் எல்லாம் நிரம்பி வழிஞ்சு, உபரி நீரை திறந்து விட்டுட்டு, அது கடலுக்கு போயிடுச்சு, கால்வாய்க்கு போயிடுச்சுன்னு கதை கட்டுறது நியாயமா என்ற, 'டவுட்' எழுதே!
பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்: தமிழகத்தை ஆளும், தி.மு.க., ஹிந்து மதத்தை மட்டும் வெறுக்கும் கட்சி. ஹிந்து கோவில்களை மட்டும், மத நம்பிக்கை இல்லாதவர்களை வைத்து நிர்வகிக்கப்படுவதை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். ஆனால், பார்லிமென்டில், 'முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம்...' என, கேட்கின்றனர்.
டவுட் தனபாலு: மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்றவங்க, ஹிந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வது இல்லையே... 'எங்களுக்கு வாழ்த்து சொல்லாதவங்களுக்கு ஓட்டு அளிக்க மாட்டோம்' என, ஹிந்துக்கள் என்றைக்கு முடிவு எடுக்குறாங்களோ, அன்று தான் அவங்க திருந்துவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக, பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன்: தி.மு.க.,வை சேர்ந்த, ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி, 'மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இறுதி போட்டியில் பங்கேற்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடி தான் காரணம்' என, சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது போலீசில் புகார் கொடுத்தேன். நீண்ட வற்புறுத்தலுக்கு பின், புகாரை பெற்று ஒப்பம் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கோர்ட்டுக்கு செல்வேன்.
டவுட் தனபாலு: இதே, உங்க கட்சிக்காரர் யாராவது, தி.மு.க., அரசை விமர்சனம் பண்ணி பதிவு போட்டுட்டா, பயங்கரவாதிகளை சுத்தி வளைக்கிற மாதிரி கைது பண்ணுவாங்க... அதே போலீசார், ஆளுங்கட்சியினர் இருக்கிற திசை பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க
என்பதில், 'டவுட்'டே இல்லை!

