PUBLISHED ON : மார் 26, 2024 12:00 AM

விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா: பெட்ரோல் விலையை குறைப்பதாக தி.மு.க., கூறியது டைப்பிங் பிழையா என தெரியவில்லை. முடியாததை சொல்வதற்காக திட்டத்தை வகுத்து கொண்டிருக்கின்றனர். மத்தியில், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வராது என்ற உறுதியில் இதை வாக்குறுதியாக அளித்துள்ளனர். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வரியை குறைத்து விட்டு, பெட்ரோல் விலையை குறைத்துள்ளனர். அதை ஏன் தமிழக அரசு செய்யவில்லை.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ஆட்சியில இருக்கிற ஒரு கட்சி, சில வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு, மக்களை சந்தித்தால் தானே, அவங்க மீது ஒரு நம்பிக்கை பிறக்கும்... 'ஜெயிச்சால் செய்றோம்'னு சொல்லி, 2021 தேர்தல் மாதிரி அல்வா தந்துட மாட்டாங்களா என்ற, 'டவுட்' மக்கள் மனதில் வரத்தானே செய்யும்!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: நான் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இன்றி இருந்தேன். நண்பர் பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் என்னை தேர்தலில் போட்டியிட வற்புறுத்தினர். இதன்படி, தேனியில் எனக்கு அவர் வழிவிட்டு ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். இருவரும் வெற்றி பெறுவோம்.
டவுட் தனபாலு: கடந்த 2017ல், தன் முதல்வர் பதவியை பறித்தவர்களில் நீங்களும் ஒருவர் என பன்னீர்செல்வமே குற்றம் சாட்டியிருக்காரு... அவரது மகன் எம்.பி.,யா இருந்த தேனி தொகுதியில், அவருக்கு எதிரான அதிருப்தி ஓட்டுகளை வச்சு, உங்களுக்கு வேட்டு வைக்கிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்: மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., வருமான வரித்துறை சோதனை நடத்த உத்தரவிடுகிறது; யாரையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிறையில் வைத்துள்ளனர். எனவே, லோக்சபா தேர்தலுக்காக 20 நாட்கள் காப்புக்கட்டி கோவிலுக்கு விரதம் இருப்பது போல், தேர்தல் விரதம் இருக்க வேண்டும். வரும் 20 நாட்களுக்கு உங்கள் வேலைகளை ஒதுக்கி வையுங்கள். வீடு வீடாக உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரியுங்கள்.
டவுட் தனபாலு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கே இந்த நிலைமை என்றால், நமக்கு என்னவாகும்னு பல தி.மு.க., தலைவர்கள் பயத்துல இருக்காங்க... அதனால, யாரோ ஒருத்தர் எம்.பி.,யாகுறதுக்கு உழைப்பதை விட, தங்களிடம் இருப்பதை பதுக்கவும், பாதுகாக்கவுமே முயற்சி செய்வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

