PUBLISHED ON : மார் 31, 2024 12:00 AM

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: பாடத் தெரிந்தவர் கச்சேரிக்கு போக வேண்டும்; ஆடத் தெரிந்தவர் மேடைக்கு வர வேண்டும்; பேசத் தெரிந்தவர் பார்லிமென்ட் செல்ல வேண்டும். அங்கு பேச ஹிந்தி, ஆங்கிலம் தெரிய வேண்டும். இரண்டும் தெரியவில்லை என்றால், வெற்றி பெற்று சென்றால், அந்த கட்டடத்தை இதை எப்படி கட்டினான் என மேலே பார்த்துவிட்டு, 'போலாமா காபி குடிக்க' என கிளம்ப வேண்டியது தான்!
டவுட் தனபாலு: உண்மை தான்... 'ஹிந்தியை அனுமதிக்க மாட்டோம்'னு அந்த மொழியை கற்க விடாமல் முட்டுக்கட்டை போட்டதே உங்க கட்சி தானே... அதனால தான், இன்றைக்கு பார்லிமென்ட் கட்டடம் மட்டுமல்ல, தமிழக எல்லையை தாண்டினாலே, தமிழர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கிற நிலைமைக்கு ஆளாகி இருக்காங்க என்பதில் 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஜாதி, மதம் பார்த்தால் எங்களுக்கு ஓட்டளிக்க வேண்டாம். அப்படி ஓட்டுகள் எங்களுக்கு தேவையில்லை. உழைப்பை நம்பியே தேர்தலில் நிற்கிறோம். பணபலம் இல்லை. பணம் கொடுத்து ஓட்டு பெறும் அரசியல் எங்களுக்கு தேவையில்லை. அதை விட விவசாயம் செய்ய கிளம்பி விடுவோம்.
டவுட் தனபாலு: 'ஜாதி பார்த்தால் ஓட்டு போடாதீங்க... பணம் கொடுத்து ஓட்டு வாங்க மாட்டோம்'னு தேர்தல் நேரத்துல ஏடாகூடமா பேசி விழுற ஓட்டையும் கெடுத்துக்கிட்டா, உங்க தம்பிங்க சீக்கிரமாவே விவசாயம் பார்க்க கிளம்பிடுவாங்க என்பதில் 'டவுட்'டே இல்லை!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: தி.மு.க., எனும் தீய சக்தியை தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்க, துரோக சக்தியான பழனிசாமி கம்பெனியை ஒழிக்க, தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க., அங்கம் வகிப்பது தான் மக்கள் மற்றும் எங்கள் நலன் சார்ந்த முடிவு.
டவுட் தனபாலு: தேர்தல் முடிந்து மீண்டும் மோடி பிரதமராக பொறுப்பேற்றால், பழனிசாமி அண்டு கோ மற்றும் தி.மு.க., அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை வேகப்படுத்தணும்னு உத்தரவாதம் வாங்கிட்டு தான் நீங்களும், பன்னீரும் பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமானீங்களோ என்ற, 'டவுட்' வருதே!

