PUBLISHED ON : ஏப் 10, 2024 12:00 AM

தென்சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசை: 'ராஜ்பவனிலேயே இருந்திருக்க வேண்டியது தானே' என்கிறார் கனிமொழி. திஹார் ஜெயிலில் இருந்த கனிமொழி தேர்தலில் போட்டியிடும் போது, ராஜ்பவனில் இருந்து வந்த நான் போட்டியிடக் கூடாதா. மக்கள் மீது அக்கறை இருப்பதால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறேன்.
டவுட் தனபாலு: மக்கள் மீது அக்கறை இருப்பதால் தான், தேர்தலில் போட்டியிடுவதா சொல்றீங்களே... அப்படி என்றால், 'கவர்னர் பதவியில் இருந்து மக்களுக்கு எதுவும் செய்ய முடியலை... அந்த பதவியே ஒரு டம்மி தான்' என்பதை மறைமுகமா ஒப்புக் கொள்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'வானத்தை வில்லாய் வளைப்போம்' என்று வாய்ப்பந்தல் போட்டு ஆட்சிக்கு வந்த ஒரு கட்சி, மக்களை ஏமாற்றியதை தவிர, ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. இன்னொரு கட்சிக்கோ சமூக நீதியும் தெரியவில்லை; தன்னாட்சி தத்துவமும் புரியவில்லை. மக்களை ஏமாற்றும் முந்தைய கட்சி வீழ்த்தப்பட வேண்டியதும், தேச நலனுக்கும், மாநில நலனுக்கும் பங்களிப்பு செய்யாத இரண்டாவது கட்சி வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
டவுட் தனபாலு: 'கார் உள்ள வரையும், கடல் நீர் உள்ள வரையும் இந்த இரண்டு கட்சிகளுடன் பா.ம.க., கூட்டணியே அமைக்காது' என்ற வாக்குறுதியையும் சேர்த்து ராமதாஸ் தராமல் போனது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
தூத்துக்குடி -தி.மு.க., வேட்பாளர் கனிமொழி: கடந்த முறை தமிழிசை துாத்துக்குடியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். அதன்பின் இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக சென்றார். இம்முறை தென் சென்னையில் போட்டியிடுகிறார். இம்முறையும் தோல்வி அடைவார். ஆனால், கவர்னராக முடியாது. ஏனெனில், மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சி வர உள்ளது.
டவுட் தனபாலு: இரண்டு மாநிலங்களின் கவர்னர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு, தேர்தல் களத்தில் நிற்கிறாங்க தமிழிசை... ஆனா, உங்க கட்சியில ஒரு அமைச்சராவது, லோக்சபா தேர்தல் களத்தில் இறங்கியிருக்காங்களா... இதுல இருந்தே யாருக்கு துணிச்சல் அதிகம் என்பது, 'டவுட்'டே இல்லாம விளங்குதே!

