PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM

தி.மு.க., கூட்டணியை ஆதரித்து பேசும் நடிகர் கருணாஸ்: பா.ஜ., அரசு சனாதன கொள்கையை வளர்த்து வருகிறது. முருகன் கோவிலில் முன்பு பண்டாரங்கள் தான் மணி அடித்துக் கொண்டிருந்தனர். தற்போது பூணுால் போட்டவர் மணி அடித்துக் கொண்டிருக்கிறார். இது தான் சனாதனம்; இதை ஒழிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: சனாதனத்தை பத்தி உதயநிதி தான் ஏட்டிக்கு போட்டியா பேசினார் என்றால், அவங்களை ஆதரிக்கிற கருணாசும் இப்படி பேசுறாரே... சினிமாவுல வேணும்னா இவர் காமெடியனா இருக்கலாம்... ஆனா, தேர்தல் களத்தில் தி.மு.க.,வுக்கு நிஜமான வில்லன் கருணாஸ் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
திண்டுக்கல் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் திலகபாமா: 2021 சட்டசபை தேர்தலின் போது ஆத்துார் தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட்டேன். 'இவருக்கு ஓட்டு போட்டால் எதுவும் செய்ய மாட்டார். ஏனென்றால், அவர் இந்த ஊரை சேர்ந்தவரே இல்லை' என அமைச்சர்ஐ.பெரியசாமி கூறினார். அதோடு, அவரிடம் நான் பணம் வாங்கியதாகவும் பொய்யானபிரசாரத்தில் ஈடுபட்டார் பெரியசாமிக்கு வேண்டுமானால் நான் பணம் தருகிறேன்.
டவுட் தனபாலு: அமைச்சருக்கே பணம் தர்ற அளவுக்கு வசதி, வாய்ப்புடன் இருக்கீங்களா என்ன...? 'மற்ற தொகுதிகளில் போட்டியிடும் பணமில்லாத பா.ம.க., வேட்பாளர்களுக்கு கொஞ்சம் கை கொடுங்க'ன்னு உங்க தலைமை சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க என்ற, 'டவுட்' எழுதே!
பா.ம.க., தலைவர் அன்புமணி: கடலுார், தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவில் அருகில், கிளி ஜோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக வனத்துறை கைது செய்துள்ளது. 'பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார்' என்று கிளிஜோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான், இந்த பழிவாங்கும் நடவடிக்கையை தி.மு.க., அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
-டவுட் தனபாலு: இதே, 'தமிழகத்துல தி.மு.க., கூட்டணி தான் 40 தொகுதிகள்லயும் ஜெயிக்கும்'னு அந்த கிளி ஜோசியக்காரர் சொல்லியிருந்தார் என்றால், அவருக்கு ராஜ உபச்சாரம் கிடைச்சிருக்கும்... ஆனாலும், தங்கர்பச்சான் எதிர்காலத்தை கணித்த கிளி, தன் எஜமான் எதிர்காலத்தை கணிக்காம போனது ஏன் என்ற, 'டவுட்'தான் எழுது!

