PUBLISHED ON : ஏப் 12, 2024 12:00 AM

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன்: வாக்காளர்கள் எல்லாம் சூரியன், இரட்டை இலைக்கு ஓட்டளித்து அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. எனவே பலாப்பழத்திற்கு ஓட்டளிக்க வேண்டும். பலாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. பன்னீர்செல்வம் ஜெயித்தால் ராமநாதபுரத்திற்கு நல்லது.
டவுட் தனபாலு: 'ரைமிங்' எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா, 2019 லோக்சபா தேர்தலில், தேனி தொகுதியில் ஜெயித்த பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அங்க என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தாருன்னு ராமநாதபுரம் தொகுதி மக்கள் எடை போட ஆரம்பிச்சா, அங்க பலாப்பழம் பழுப்பது, 'டவுட்'தான்!
காங்., - எம்.பி., ராகுல்: இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல். ஒரு பக்கத்தில் நாட்டை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ் உள்ளது. மற்றொரு பக்கத்தில், மக்களை பிரிக்க முயற்சிக்கும் நபர்கள் உள்ளனர். இதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. பொய்களை கூறுவதால் வரலாறு மாறி விடாது.
டவுட் தனபாலு: கடந்த 10 வருஷங்களா நாட்டில் எங்கயும் மத கலவரங்கள், குண்டு வெடிப்புகள் நடக்கலை... இதெல்லாம் நல்லதா உங்க கண்ணுக்கு படலையா... உங்க கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பிய்ச்சுக்கிட்டு ஓடுறாங்களே... அவங்களையே ஒருங்கிணைக்க முடியாத நீங்க எப்படி நாட்டை ஒருங்கிணைப்பீங்க என்ற, 'டவுட்' எழுதே!
கடலுார் பா.ம.க., வேட்பாளர் தங்கர் பச்சான்: எனக்கு ஜோதிடம் கூறிய கிளி ஜோதிடர்கள் கைது என்று அறிந்ததும் வருத்தப்பட்டேன். விடுவிக்கப்பட்டனர் என்ற தகவல் வரவும் மகிழ்ச்சியாகி விட்டேன். ஜோதிடர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கிளி ஜோதிடம் பார்த்த தகவல் வெளியானதால், கடலுார் மட்டுமல்ல; மற்ற ஊர்களுக்கும் நான் யார் என்று சொல்லத் தேவையில்லாமல் போய் விட்டது. அந்த அளவுக்கு, இந்த சர்ச்சைக்குரிய செய்தி என்னை பிரபலப்படுத்தி விட்டது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ஆனா, இந்த பிரபலம் மட்டுமே, லோக்சபா தேர்தல்ல உங்களை கரை சேர்த்துடும்னு நம்பிட்டு அசால்டா இருந்தீங்கன்னா, கடைசியில ஏமாற்றம் தான் மிஞ்சும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

