PUBLISHED ON : ஏப் 13, 2024 12:00 AM

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: மோடியின், 10 ஆண்டு கால ஆட்சியில், உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. மோடியின் அரசு தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும். வரும் 2047ல் உலகின் முதல் பொருளாதார நாடாக, வல்லரசாக இந்தியாவை மாற்றும் இலக்குடன் பணியாற்றி வரும் பிரதமர் மோடிக்கு, வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அப்படி எல்லாம் பொருளாதார வல்லரசாக இந்தியா மாறிடக் கூடாது என்றுதான், நம்ம நாட்டு தேர்தல்களில் சீனா போன்ற நாடுகள் மூக்கை நுழைக்க பார்க்கிறதோ என்ற, 'டவுட்' வருதே!
திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது.
டவுட் தனபாலு: அது சரி... அந்த மாநிலத்து மக்களுக்கு உங்க கட்சியினரை விட, வேற யாரால பெரிய அளவுல தீங்கு செய்துட முடியும்... உங்க கட்சியினரின் அருமை, பெருமைகளை அறிந்து கொள்ள சந்தேஷ்காலி சம்பவம் ஒண்ணே போதும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: கடந்த, 1999ல் நான் பெரியகுளத்தில் போட்டியிட வரும்போதே வழக்கு இருந்தது. நரசிம்மராவ் ஆட்சி காலத்தில், ஜெயலலிதா மேல் இருந்த கோபத்தில் என் மீதும் வழக்கு போட்டார். அதை சட்டரீதியாக எதிர்கொள்கிறேன். அதற்காக தான், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தேன் என, ஸ்டாலின் பேசுகிறார். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை எதிர்கொள்ள நான் பா.ஜ.,வுக்கு போக வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.
டவுட் தனபாலு: அதானே... நீதிமன்றத்துக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே... பா.ஜ., பக்கம் போயிட்டா, வழக்குகளில் இருந்து தப்பிடலாம்னு இருந்தால், வழக்குகளில் சிக்கிய தி.மு.க., புள்ளிகள் பலரும், 'டவுட்'டே இல்லாம அங்க போயிருப்பாங்களே!

