PUBLISHED ON : ஏப் 16, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி அடையவில்லை. அ.தி.மு.க.,வுக்கும், - தி.மு.க.,வுக்கும் தான் போட்டி. முன்னேறிய சமுதாய மக்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்காமல் பிறருக்கு ஓட்டு போட்டால், அது, தி.மு.க.,வுக்கே உதவும். எனவே, பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டு தங்கள் ஓட்டை, 'வேஸ்ட்' செய்ய மாட்டார்கள்.
--டவுட் தனபாலு: மத்தியில் ஆளுங்கட்சியாக பா.ஜ., உள்ளது; மாநிலத்தில் ஆளுங்கட்சியாக தி.மு.க., உள்ளது... எனவே, இந்த ரெண்டு கட்சிகளுக்கும் ஓட்டு போட்டா ஏதாவது வளர்ச்சி பணிகள் நடக்கும்... எதுக்கு அ.தி.மு.க.,வுக்கு போட்டு வேஸ்ட் பண்ணனும்னு வாக்காளர்கள் நினைச்சுட்டா, உங்க கட்சி பாடு திண்டாட்டமாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: படப்பிடிப்புக்கு ரஷ்யா சென்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால், அக்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
டவுட் தனபாலு: தமிழகத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் கட்சி துவங்கிய விஜய், தேர்தலில் ஓட்டு போடாமல் இருந்தால், அவருக்கு நம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லையோ என்ற, 'டவுட்' வாக்காளர்கள் மனதில் எழுதே... அது, அவரது கட்சி வளர்ச்சிக்கு உதவாது என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பா.ஜ., கூட்டணி வேட்பாளராக, வேலுார் தொகுதியில் போட்டியிடுகிறார். அக்கட்சியின் வர்த்தக அணி தலைவரான, அரிசி மண்டி நடத்தி வரும் வினோத், வேலுாரில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சென்னை மதுரவாயலில் உள்ள வினோத் வீட்டில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 8.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
டவுட் தனபாலு: 'தேர்தல் அதிகாரிகள், பா.ஜ.,வுக்கு எதிரான கட்சியினரிடம் தான் சோதனை நடத்தி, பணம், பொருட்களை பறிமுதல் பண்றாங்க' என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு, 'டவுட்'டே இல்லாம இந்த செய்தி பதிலடி தந்துள்ளது!

