PUBLISHED ON : ஏப் 17, 2024 12:00 AM

காங்., - எம்.பி., ராகுல்: மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய்; படித்த இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை; 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு, 400 ரூபாய் சம்பளம் உட்பட பல திட்டங்களை செயல்படுத்தும்.
டவுட் தனபாலு: தமிழகத்துல மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கவே, தி.மு.க., அரசு தலையால தண்ணீர் குடிக்குது... இதுல, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் எல்லாம் சாத்தியம் தானா...? 'ஆட்சிக்கு வந்தால் தானே, அதை பற்றி எல்லாம் கவலைப்படணும்'னு வாக்குறுதிகளை வாரி வீசுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத்: ஆவின் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பால் பாக்கெட்டுகளில், வாழ்த்து செய்தியை அச்சிட்டு வினியோகித்து வருகிறது. தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்து செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டது இல்லை. எனவே, இந்த ஆண்டும் அதை அச்சிடவில்லை.
டவுட் தனபாலு: 'சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு இல்லை; தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு' என்று விதண்டாவாதம் பேசுற ஆட்சியாளர்கள், நிர்வாகத்தில் இருக்கிற ஆவின் அதிகாரியிடம் இருந்து இப்படித்தான் பதில் கிடைக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்ற போவது, சுவர் மீது எழுத்தாகி விட்டது. பா.ம.க., உட்பட கூட்டணி வேட்பாளர்கள், 40 பேரும் வெற்றி பெற வேண்டும் என்றால், அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டும். பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட, அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் வேண்டும்.
டவுட் தனபாலு: ஓட்டுப்பதிவுக்கு முந்தைய ரெண்டு நாட்கள் தான், திராவிட கட்சிகள் பட்டுவாடாவில் பறந்து பறந்து அடிக்கும் என்பது, அந்த கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்த டாக்டருக்கு நன்றாகவே தெரியும்... அதனால தான், கட்சியினரை உஷார்படுத்துறார் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

