PUBLISHED ON : ஏப் 21, 2024 12:00 AM

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு பல்வேறு வழக்குகளை போட்டுள்ளது. தண்ணீரை தேக்கி நாங்கள் தருகிறோம் என, அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. எந்த அணியில் நாங்கள் இருந்தாலும், தாய்க்கும், பிள்ளைக்கும், வயிறு வேறு தான். மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், அணை கட்ட முடியாது. அவர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, நமக்கும் உரிமை உள்ளது.
டவுட் தனபாலு: காங்., தலைவர்களான சோனியா, ராகுலிடம் உங்க தலைவர் ஸ்டாலின் ரொம்ப நெருக்கமா இருக்காரு... அவங்களிடம், 'கர்நாடக காங்கிரசாரை அடக்கி வைங்க'ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா, பிரச்னை முடிஞ்சிடுமே... அதுல உங்களுக்கு என்ன தயக்கம் என்ற, 'டவுட்' வருதே!
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: நாட்டின் ஜனநாயகத்துக்கு பேராபத்தாக இருப்பது வாரிசு அரசியல். இந்த வாரிசு அரசியலின் பிரதிநிதியாகத் தான் ராகுல் செயல்படுகிறார். தடை செய்யப்பட்ட அமைப்புகள், காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதும் ஆபத்தான விஷயம்.
டவுட் தனபாலு: வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு கேடு என்பதில், 'டவுட்'டே இல்லை... ஆனா, கர்நாடகாவில் உங்க கட்சியின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., பார்லிமென்ட் குழு உறுப்பினரா இருக்காரு... அவரது மூத்த மகன் ராகவேந்திரா எம்.பி.,யா இருக்காரு... இளைய மகன் விஜயேந்திரா எம்.எல்.ஏ., பிளஸ் மாநில பா.ஜ., தலைவரா இருக்காரு... இதெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா என்ற, 'டவுட்' வருதே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகம், புதுச்சேரியில் மவுன புரட்சி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள், 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவர்; மூன்றாம் முறையாக மோடி பிரதமராவார்; மாற்றம் நிச்சயம் வரும். இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய வெற்றியை பெரும். பா.ம.க., போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: மவுன புரட்சி, உங்க அணிக்கு வெற்றி தேடி தந்தால் சந்தோஷம் தான்... உங்க கணிப்பின்படியே 40க்கு 40லயும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றாலும், உங்க கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிட்டுமா என்பது, 'டவுட்'தான்!

