PUBLISHED ON : ஏப் 22, 2024 12:00 AM

பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்: தலைவர் என்றால் எதிரிகளும் புகழும்படி இருக்க வேண்டும். அத்தகைய தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இது, நமக்கெல்லாம் பெருமை. பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பே, மோடி போன்ற ஒருவர், தன் நாட்டுக்கும் தேவை என கூறி வருகிறார்.
டவுட் தனபாலு: நம் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள் எல்லாம் புகழ்ந்து தள்ளுறாங்க... இந்தியாவுல தான், அவரை தேர்தல் களத்தில் ஜெயிக்க முடியாத விரக்தியில, எதிர்க்கட்சி தலைவர்கள் வசை பாடுறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: பெங்களூரில் தேர்தல் பிரசாரம் செய்த கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், 'காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; பெங்களூருக்கு காவிரி நீரை வழங்குவோம்' என, கூறியிருக்கிறார். இதை கண்டிக்கக் கூட முன்வராமல், முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக, தமிழகத்தின் காவிரி ஆறு உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டவுட் தனபாலு: நமக்கு தேர்தல் முடிஞ்சு போயிடுச்சு... ஆனா, கர்நாடகாவுல, மே 7ம் தேதி தான் முடியுது... அம்மாநில மக்களின் ஓட்டுகளை வளைக்க சிவகுமார் இப்படி எல்லாம், 'ஸ்டன்ட்' அடிக்கிறார்... அது தெரிஞ்சு தான், நம் முதல்வரும் மவுனமா இருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: ம.தி.மு.க., முதன்மை செயலரும், திருச்சி லோக்சபா தொகுதி வேட்பாளருமான துரை வைகோ, முதல்வர் ஸ்டாலினை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்காகவும், பிரசாரம் செய்ததற்காகவும் நன்றி கூறினார்.
டவுட் தனபாலு: நிஜமாவே நன்றி சொல்லத் தான் போனாரா... ஒருவேளை, 'திருச்சியில, தி.மு.க.,வினர் தனக்கு சரியா தேர்தல் வேலை பார்க்கலை... என் வெற்றிக்கு ஏதாவது பங்கம் வந்தா, அதுக்கு அவங்க தான் பொறுப்பு'ன்னு புகார் பட்டியல் வாசிச்சுட்டு வந்தாரா என்ற, 'டவுட்' வருதே!

