PUBLISHED ON : ஏப் 23, 2024 12:00 AM

சுகாதார துறை முன்னாள் அமைச்சரான, அ.தி.மு.க.,வைசேர்ந்த விஜயபாஸ்கர்: 'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தி.மு.க.,விற்கு எதிரிகள் இல்லை. அதனால், இண்டியா கூட்டணி வெற்றி பெறும்' என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அவர் கண்ணாடி போட மறந்திருப்பார். அதனால் தான், அவர் கண்ணுக்கு எதிரிகள் தெரியவில்லை.
டவுட் தனபாலு: முன்பு ஒரு முறை, முதல்வராக இருந்த உங்க தலைவி ஜெயலலிதாவும், சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் வெளிநடப்பு செய்த பின், 'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை நமக்கு எதிரிகளே இல்லை'ன்னு தான் பேசினாங்க... அவரிடம் அரசியல் பயின்ற ரகுபதி, அந்த டயலாக்கை இன்னும் மறக்கலை என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பா.ஜ., விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ்: கோவை லோக்சபா தொகுதி, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் பெயர்கள் நீக்கப்பட்டதால்,1,000த்துக்கும் மேற்பட்ட வாக்கா ளர்கள் ஓட்டு போட முடியவில்லை. இவர்கள் அனைவரும், நல்லாட்சியை விரும்பி, ஓட்டளிக்கக் கூடிய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
டவுட் தனபாலு: அது சரி... நல்லாட்சியை விரும்புறவங்க தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவாங்களா...? கண்டிப்பா நமக்கு ஓட்டு போட மாட்டாங்கன்னு முன்கூட்டியே தெரிஞ்சு தான், அவங்களது பெயர்களை தி.மு.க.,வினர் ஏற்பாட்டுல, அதிகாரிகள் நீக்கிட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தை சேர்ந்த கோமதி என்பவர், ஓட்டுப்பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன், தி.மு.க.,வினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக, தி.மு.க.,வினர் இந்தப் பாதக செயலை செய்திருப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
டவுட் தனபாலு: அடப்பாவமே... தேர்தல் வன்முறைக்கு பேர் பெற்ற மேற்கு வங்கம், பீஹார்ல கூட இந்த அளவுக்கு கொடூரங்கள் நடக்காதே... இதை எல்லாம் பார்த்து, ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டவங்க கூட ஏன்டா போட்டோம்னு வருத்தப்படுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

