PUBLISHED ON : ஏப் 29, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: நடிகர் விஷாலின், ரத்னம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியிட விடாமல் ஏன் தடுக்க வேண்டும்... அரசியலுக்கு வருவேன் என்றால், இது தான் கதியா... இன்று, விஷால் படத்திற்கு என்றால், நாளை, தம்பி விஜய் படத்திற்கும் இது தான்; தமிழ் சினிமாவிற்கும் இது தான். அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும் தான், தமிழ் சினிமாவில் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திமிரில் ஆடுகின்றனர்.
டவுட் தனபாலு: இதே விஜய்யின், தலைவா படத்துக்கு, ஜெ., ஆட்சியில கொடுத்த குடைச்சல், மாஸ்டர் படத்துக்கு பழனிசாமி ஆட்சியில தந்த இடையூறுகளை நீங்க மறந்திருந்தாலும், விஜய் மறந்திருக்க மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., - எம்.பி., ராகுல்: பிரதமரின் பேச்சுக்களை கவனிக்கும் போது, அவர் பயத்தில் இருக்கிறார் என்பது புரிகிறது. மக்களின் கவனத்தை முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப முயற்சிக்கிறார். அடுத்து அவர் மேடையில் கண்ணீர் சிந்தி அழுதாலும் அழுவார்.
டவுட் தனபாலு: நீங்க மட்டும் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்றீங்களா... 'காங்., ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு வருஷத்துக்கு, 1 லட்சம் ரூபாய் தருவோம்'னு கவர்ச்சி வாக்குறுதிகளை சொல்லி தானே, ஓட்டு கேட்குறீங்க... கண்ணீர் விடுவது யார் என்பது, ஜூன் 4ம் தேதி, 'டவுட்'டே இல்லாம தெரிஞ்சிடும்!
பத்திரிகை செய்தி: 'பள்ளிகளில் மாணவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில், உடல், மனரீதியான தண்டனை அளித்தால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
டவுட் தனபாலு: மாணவர்களை மனரீதியாக, உடல் ரீதியாக காயப்படுத்தக் கூடாது என்பது சரி தான்... ஆனா, அந்த காலத்து அப்பாக்கள், 'முழியை மட்டும் விட்டுட்டு தோலை உரிச்சிடுங்க'ன்னு வாத்தியார்கிட்ட சொல்லிட்டு போவாங்க... அதனால, சிறப்பான, ஒழுக்கமான ஒரு தலைமுறை உருவானது... இப்ப, இப்படி எல்லாம் உத்தரவு போடாததால தான், வாத்தியாரை அடிக்கிற மாணவர் சமுதாயம் உருவாகிட்டு இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!

