PUBLISHED ON : ஏப் 30, 2024 12:00 AM

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: சுகாதார துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லுாரிக்கும், அவரது வயலுக்கும் கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரி தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும் தான். இது குறித்து, நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார். அவராலே பாதி காவிரி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது. இதை அனுமதிக்க முடியாது.
டவுட் தனபாலு: பக்கத்து மாநிலமான கர்நாடகாவுல, உங்க கூட்டணி கட்சியான காங்., ஆட்சி தான் நடக்குது... அவங்களிடம் நைச்சியமாக பேசி தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை வாங்க முடியலை... அதை விட்டுட்டு, அவரது வயலுக்கு தண்ணீர் போகுது, இவரது வாய்க்காலுக்கு ஓடுதுன்னு சால்ஜாப்பு சொல்லணுமா என்ற, 'டவுட்' எழுதே!
பா.ம.க., தலைவர் அன்பு மணி: கனிமவள கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மட்டும், கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும், ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
டவுட் தனபாலு: அரசு அலுவலகங்கள்ல 500 - 1,000 ரூபாய் லஞ்சம் வாங்குறவங்களை, பயங்கரவாதிகளை மாதிரி பாய்ந்து பிடிக்கிற நம்ம லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கண்களுக்கு 1,000 கோடி ரூபாய் கையூட்டு எல்லாம் தெரியலையா... ஒருவேளை, இதுல பெரிய கைககள் சம்பந்தப்பட்டிருப்பதால, பார்த்தும் பாராதது போல இருக்கின்றனரா என்ற, 'டவுட்'தான் எழுது!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்தியஇணை அமைச்சர் முருகன்: நீலகிரி, கோவை, தென் சென்னை உள்ளிட்ட பல இடங்களில், வாக்காளர்கள் பெயர்கள் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. இதில், பா.ஜ., ஆதரவாளர்களே அதிகம்.தி.மு.க.,வினர் தங்கள் தோல்வியை மறைக்க, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கிஉள்ளனர்.
டவுட் தனபாலு: தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னாடியே, வாக்காளர் பட்டியலை திராவிட கட்சியினர் தெருவுக்கு தெரு சென்று சரிபார்த்தாங்களே... அப்ப, உங்க கட்சியினர் என்ன பண்ணிட்டு இருந்தாங்க...? தும்பை விட்டுட்டு வாலை பிடிப்பது சரியா என்ற, 'டவுட்'தான் வருது!

