PUBLISHED ON : மே 03, 2024 12:00 AM

தே.மு.தி.க., பொது செயலர் பிரேமலதா: கர்நாடக அரசிடம், காவிரியில் தண்ணீர் கேட்பதும், அவர்கள் கோடை காலத்தில் தண்ணீர் இல்லை என்பதும், ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. டிசம்பர் மாதம் எத்தனை மாவட்டங்களில் வெள்ளம் வந்தது. ஒருபுறம் அதிக மழையை கடவுள் தருகிறார்; அந்த தண்ணீரை சேமிக்கும் திறன், தொலைநோக்கு பார்வை அரசுக்கு இல்லை. தமிழகத்தில் மழை நீரை நிர்வகிக்கும் திறன், ஆட்சியாளர்களுக்கு இல்லை.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது வாஸ்தவம் தான்...- 'டாஸ்மாக்' மேலாண்மையில் காட்டுற அக்கறையில் கால்வாசியை நீர் மேலாண்மையில் காட்டினாலே, தண்ணீருக்கு அண்டை மாநிலங்களிடம் நாம கையேந்த வேண்டியிருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், 'ஆப்சென்ட்' ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: வாத்தியார்கள் வேலை, மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்க வேண்டியது மட்டுமே... அதை விட்டுட்டு, தேர்வு எழுதாம அலட்சியமா இருந்த மாணவர்களை வீடு தேடி போய், 'வா ராசா... வந்து தேர்வு எழுதுப்பா'ன்னு கெஞ்சி கூத்தாட சொல்வது என்ன நியாயம்... தானா பழுக்காத பழத்தை தடியால் அடித்து பழுக்க வைக்கணுமா என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: பாடத்திட்டங்களில் வரலாற்றில் இடம் பெற்றவர்கள், சாதனையாளர்கள் குறித்த பாடங்கள் தான் இருக்க வேண்டும். கருணாநிதி என்றால் சர்க்காரியா கமிஷன் குற்றவாளி என்பது நினைவுக்கு வரும். ஊழலுக்காக கலைக்கபட்டது அவரது ஆட்சி. அவர் குறித்த பாடம் பள்ளிகளில் இடம் பெறுவது தவறு. அ.தி.மு.க., அரசு வரும்போது, அவர் பாடம் இடம்பெறாது.
டவுட் தனபாலு: அது சரி... ஆட்சிக்கு வர்றவங்க எல்லாம், அவங்கவங்க தலைவர்கள் பாடத்தை புகுத்துனா, நாளைக்கு நீங்க ஜெ., பாடத்தை புகுத்துவீங்க... அப்புறம், கல்வி துறை என்பது கழக வரலாறு துறையா மாறிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!