PUBLISHED ON : மே 05, 2024 12:00 AM

தமிழக கவர்னர் ரவி: பொருளாதாரத்தில் சர்வதேச அளவில், 5வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவுடன் வணிகம் செய்யவும், இங்கு முதலீடு செய்யவும், பல வெளிநாடுகள் தயாராக உள்ளன. இந்திய இளைஞர்களின் திறமைகள், மற்ற நாடுகளுக்கு தேவைப்படுகின்றன. இந்தியாவுக்கு, இது பொற்காலமாக உள்ளது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ஐந்தாவது இடத்தில்இருந்து, மூணாவது இடத்துக்கு இந்தியாவை முன்னேற்ற பிரதமர் மோடி அல்லும், பகலும் பாடுபட்டுட்டு இருக்காரு... ஆனா, நம்ம பொற்காலத்தை கற்காலமா மாத்த ஒரு குரூப் தீயா வேலை பார்க்குதே... ஆனாலும், அவங்க முயற்சி தோல்வியில் முடியும் நாள் ஜூன் 4 என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: சென்னை, மடிப்பாக்கத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வரும் ஆந்திராவை சேர்ந்த முதியவரிடம், மடிப்பாக்கம் தி.மு.க., கவுன்சிலர் சமீனா செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி, அவரை தாக்கியுள்ளனர். இது குறித்து, முதியவர் அளித்த புகார் மீது மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டவுட் தனபாலு: லோக்சபா தேர்தல் நடந்ததால, தி.மு.க.,வினர் கொஞ்சம் அடக்கி வாசிச்சாங்க போலிருக்குது... தேர்தல் முடிஞ்சிட்டதால, அதுக்கு செலவு செய்த தொகையை எடுக்க இப்படி அடாவடியில இறங்கிட்டாங்களா என்ற, 'டவுட்'தான் வருது!
திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: கவர்னர் மாளிகையில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண் கண்ணீர் வடிப்பதை பார்த்து, என் இதயமே உடைந்து விட்டது. சந்தேஷ்காலி கலவரம் பற்றி அலறும் பா.ஜ.,வினர் இதற்கு என்ன பதில் சொல்ல போகின்றனர்.
டவுட் தனபாலு: நீங்க குறிப்பிடும்படியான சம்பவம் நிஜமாகவே நடந்திருந்தா, அது விசாரணைக்குரியது என்பதில், 'டவுட்'டே இல்லை... அதே நேரம், தானிக்கு தீனி சரியா போச்சுங்கிற மாதிரி, சந்தேஷ்காலி கலவரத்தை நீங்க நியாயப்படுத்த முயற்சிப் பதை ஏத்துக்க முடியாது என்பதிலும், 'டவுட்' இல்லை!