PUBLISHED ON : மே 07, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் தனசிங், எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கொலை மிரட்டல் வருகிறது என, முன்கூட்டியே போலீஸ் துறைக்கு புகார் கொடுத்தும், எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த அளவிற்கு அலட்சிய போக்குடன் தி.மு.க., அரசு செயல்படுகிறது. போதிய பாதுகாப்பை அளித்திருந்தால், இந்த கொலை நிகழ்ந்திருக்காது.
டவுட் தனபாலு: முதல்வரின் வசம் இருக்கும் போலீஸ் துறைக்கு, இந்த சம்பவம் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது என்பதில், 'டவுட்'டே இல்லை... இந்த விவகாரத்தில், அலட்சிய போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கணும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை.!
காஷ்மீரில் செயல்படும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒரு முறைகேடான இயந்திரம். வாக்காளர்கள் ஓட்டு போடும் போது, நீங்கள் அழுத்தும் பட்டனுக்கு பக்கத்தில் உள்ள எல்.இ.டி., விளக்கு ஒளிர்கிறதா, 'விவிபேட்' இயந்திரத்தில் அதே சின்னம் தெரிகிறதா என சரிபாருங்கள்.
டவுட் தனபாலு: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் பண்ணவே முடியாது என உச்ச நீதிமன்றமே தெரிவித்து விட்டது... அதன்பின்னும், அதன் மீது குற்றம் சாட்டுவது, உங்க தோல்விக்கான காரணங்களை இப்பவே தேடுறீங்களோ என்ற, 'டவுட்'டைதான் ஏற்படுத்துது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளது. மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் அதிகபட்ச மின் தேவை, 19,693 மெகாவாட். இதில், மின்வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி, 4,332 மெகாவாட் தான். மொத்த தேவையில், ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே, தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால், மின்வெட்டு தொடர் கதையாகும்.
டவுட் தனபாலு: கடந்த 2008ல் கருணாநிதி ஆட்சியின் போது, தமிழகத்தில் மின்வெட்டு அமலானது... அதுவே, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தோல்விக்கும் காரணமாக அமைந்ததை, இன்றைய ஆட்சியாளர்கள் மறந்துட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!