PUBLISHED ON : மே 11, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: தி.மு.க.,வின் மூன்றாண்டு சாதனை என்பது, செயலற்ற ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி புள்ளி விபரங்களுடன்அறிக்கை வெளியிட்டார்.இதற்கு முதல்வர் நேரடியாக பதில் அளிக்காமல், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.நங்கநல்லுார் கூட்டுறவு சங்கத்தில் நடந்த மோசடி, பாரதி காலை சுற்றிய பாம்பு போல வலம் வருகிறது. ஆட்சி மாறும், காட்சி மாறும். அப்போது அந்த புகார்கள் துாசி தட்டி விசாரணை நடத்தப்படும்.
டவுட் தனபாலு: நங்கநல்லுார் கூட்டுறவு சங்கத்துல, 1996 - 2001ல் அதன் தலைவராக பாரதி இருந்தப்ப மோசடி நடந்ததா புகார்கள் இருக்கு... அதன்பின், மூன்று முறை அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததே... அப்ப எல்லாம் அதன் மீது நடவடிக்கை எடுக்காம என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்ற, 'டவுட்' வருதே!
காங்., பொது செயலர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா: கண்டிப்பாக தீவிர அரசியலுக்கு வருவேன். மக்களுக்கு சேவை செய்வதை பெரிதும் விரும்புகிறேன். லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லாமல் போய்விட்டாலும், ராஜ்யசபா வாயிலாக தேர்வாகி, மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்.
டவுட் தனபாலு: ஏற்கனவே சோனியா குடும்பத்தில், அவங்க, பிரியங்கா, ராகுல்னு மூணு பேருமே அரசியல்ல இருக்காங்க... இப்ப நீங்களுமா...? பிரியங்காவின் கணவர் என்ற உங்க அடையாளத்தை, உங்களது மனைவி பிரியங்கான்னு மாற்ற துடிக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதி களுக்கு ஒருவர் என, 117 மாவட்ட செயலர்களை நியமிக்கவும், இதில், இளைஞர் அணியை சேர்ந்த பலருக்கு வாய்ப்பளிக்கவும் உதயநிதி முடிவு செய்துள்ளார். மேலும், தி.மு.க.,வில் மூன்று தலைமுறைகளாக கோலோச்சும் சீனியர்கள் பலரை கழற்றி விடவும் திட்டமிட்டுள்ளார்.
டவுட் தனபாலு: தி.மு.க., மூணு தலைமுறையா அடுத்தடுத்து ஆட்சிக்கு வர, அந்த சீனியர்களின் அயராத உழைப்பு தான் காரணம்... அவங்களை எல்லாம் தடாலடியா கழற்றி விட்டால், 'வருங்கால முதல்வர்' என்ற உதயநிதியின் கனவு, கனவாகவே போயிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!