PUBLISHED ON : மே 12, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: விருதுநகர் மாவட்டத்தில், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளாலும், பல முறை சுட்டிக்காட்டியும், அலட்சியம் காட்டும் அரசு நிர்வாகத்தாலும், பட்டாசு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு, கேள்விக்குறியாகி உள்ளது. இனியும் அலட்சியம் காட்டாமல், பட்டாசு ஆலைகளில், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை, உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: வருஷா வருஷம், பட்டாசு ஆலைகள்ல விபத்துகள் நடப்பதும், அதில் பலர் பலியாவதும் தொடர்கதையாகி வருகின்றன... ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாக அதிகாரிகளையும் இதற்கு பொறுப்பாக்கி, கடும் தண்டனை தந்தால் மட்டுமே, இது போன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நடக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்புகளை மாற்றி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போதைய நிலவரத்தில் இருந்து, 70 சதவீதத்துக்கு மேல் புதிய வழிகாட்டி மதிப்புகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன. இதனால், பத்திரப்பதிவு கட்டணங்கள் கடுமையாக உயரும்.
டவுட் தனபாலு: 'என்னடா, தேர்தல் முடிஞ்சிடுச்சே... இன்னும் எந்த கட்டணத்தையும் ஏத்தாம இருக்காங்களே' என நினைத்தோம்... இப்ப, பத்திரப்பதிவுல ஆரம்பிச்சுட்டாங்களா...? அடுத்தடுத்து கட்டண உயர்வுகள் மக்கள் தலையில வந்து விழும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: சிவகாசி அருகே, பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். தி.மு.க., ஆட்சியில், விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் வெடி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து நான் அடிக்கடி சுட்டிக்காட்டியும், இதுவரை பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத தி.மு.க., அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்கிறேன். இனி, இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: என்னமோ, அ.தி.மு.க., ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் நடக்கவே இல்லை என்பது போல பேசுறீங்களே... உங்க ஆட்சியில நடந்த விபத்துகளின் போது, உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திருந்தா, தற்போது இந்த கொடூரம் நிகழ்ந்திருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!