PUBLISHED ON : மே 13, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும், காணொலிகளும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது. அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் தி.மு.க., அரசின் அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்கள்.
டவுட் தனபாலு: வனப்பகுதி மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது நியாயமற்றது. இதை எல்லாம் மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க... இரண்டு வருஷத்துக்கு பின் வரும் சட்டசபை தேர்தலில், இவங்களை ஓட்டுகள் வழியே வெளியேற்றுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி: ஜூன் 4க்கு பின், போலி தேசியவாத காங்கிரசும், போலி சிவசேனாவும் காங்கிரசுடன் இணையும் மனநிலையில் உள்ளன. காங்கிரசுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதில், அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே உடன் இணையுங்கள்.
டவுட் தனபாலு: எல்லாரும், மாற்று கட்சியினரை, எங்க கட்சியில வந்து இணையுங்க என்று தான் அழைப்பு விடுப்பாங்க... ஆனா, நீங்க, உங்க கூட்டணி கட்சிகளுடன் போய் சேருங்க என்று பெருந்தன்மையா சொல்றீங்களே... நிஜமாவே, நீங்க ஒரு வித்தியாசமான தலைவர் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழகம் முழுதும் செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகள், உரிய உரிமம் பெற்றுள்ளனவா, அங்கு தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்களுக்கு, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டு உள்ளது.
டவுட் தனபாலு: தமிழகத்தில் மூணு வருஷமா தி.மு.க., ஆட்சி தானே நடக்குது... சிவகாசி பட்டாசு ஆலை விபத்து நடந்ததும் தான், தொழிலாளர் துறைக்கு இதெல்லாம் தெரிய வருதா... இத்தனை வருஷமா, அந்த துறையின் அதிகாரிகள் துாங்கிட்டா இருந்தாங்க என்ற, 'டவுட்' தான் வருது!