PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை: அ.தி.மு.க., ஆட்சியில் ஊதிய உயர்வு கேட்டு, நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் எங்களை சந்தித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் முடிந்தும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வருத்தமும், ஏக்கமும் உள்ளது.
டவுட் தனபாலு: போன முறை எதிர்க்கட்சி தலைவரா இருந்த ஸ்டாலின், உங்களை தேடி வந்து ஆதரவு தெரிவிச்சாரே... இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, உங்களுக்கு ஆதரவு தந்த மாதிரி தெரியலையே... உங்களுக்கு ஊதிய உயர்வு தரக் கூடாது என்பதில் ரெண்டு தலைவர்களும் ஒரே சிந்தனையில் இருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த இடத்தில் இணைப்பு வழங்க, கூடுதல் மின் சாதனங்கள் நிறுவ அவசியமில்லாத பட்சத்தில், மூன்று நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். அதிகபட்சம், ஏழு நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
டவுட் தனபாலு: புதிய மின் இணைப்பு வழங்குறதுக்கான கால அவகாசத்தை குறைத்திருப்பது நல்லது தான்... ஆனா, இதையே காரணம் காட்டி, மின்வாரிய அதிகாரிகள், தங்களது, 'கமிஷன்' தொகையை ஏத்திடாம இருப்பாங்களா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளை தொடர்ந்து, எட்டாம் வகுப்பு பாடத்திலும், கருணாநிதி குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது.எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், பெண் உரிமை சார்ந்த சட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், 1989ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட, 'பெண்களுக்கும் சொத்தில் பங்கு' என்ற சட்ட திருத்தம் பற்றி கூறப்பட்டுள்ளது. அத்துடன், சட்டசபையில் கருணாநிதி பேசும் படமும் இடம்பெற்றுள்ளது.
டவுட் தனபாலு: பேசாம முதல் வகுப்புல இருந்து பிளஸ் 2 வரைக்கும், கருணாநிதி செய்த பல சாதனைகளை பாடமா வச்சிடலாமே... தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை, தி.மு.க.,வின் ஒரு அணியாக படிப்படியா மாறிட்டே வருவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

