PUBLISHED ON : மே 18, 2024 12:00 AM

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: கர்நாடகத்தில் தங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும், காவிரியில் தமிழகத்திற்கு உண்டான உரிமை நீரை கேட்டு பெறாமல், முதல்வர் கபட நாடகம் ஆடி வருகிறார். தமிழக அரசு அதிகாரிகள் டில்லி செல்லாமல், 'ஆன்லைன்' வழியாக காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, நீர்வளத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தை விட, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் தான் திடமான விவாதங்கள் நடத்தி, தமிழகத்தின் உரிமையை காக்க முடியும்.
டவுட் தனபாலு: நம்ம அதிகாரிகள் நேர்ல போய், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி விட்டால், கர்நாடக காங்., அரசுக்கு பாதிப்பு ஏற்படும்... இதனால, சோனியா, ராகுலுக்கு தர்மசங்கடம் வருமே என நினைச்சு தான், அரசு இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: நடிகர் சூர்யா, தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். ஆளும் கட்சி அரசியல் வாரிசின் ஆசியுடன், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, சென்னையில் ஆட்களே இல்லாத அவரது வீட்டுக்கு, தினமும் நான்கு போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டவுட் தனபாலு: தமிழகத்துல, கஞ்சா போதையிலபள்ளிக்கூட பசங்களே அடிதடி, அரிவாள் வெட்டுன்னு ரணகளம் பண்றாங்க... இப்படி எல்லாம் போலீசாரை வெட்டி வேலைகளுக்கு அனுப்பி வச்சா, சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: கடந்த நிதியாண்டில் மின் வாரியத்துக்கு மொத்தம் 80,367 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. செலவுகளை பொறுத்தவரை, அதிக அளவாக மின் கொள்முதல் மற்றும் வழித்தடத்திற்கு, 51,460 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. மின் உற்பத்திக்கு 22,407 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: மின்வாரியத்தில் உற்பத்தி செலவை விட, கொள்முதல் செலவு தான் கூடுதலாக இருக்கு... கொள்முதல் பண்றதுல தான், சிலருக்கு கொழுத்த லாபம் கிட்டுது என்பதால் தான், உற்பத்தியில் கவனம் செலுத்த மாட்டேங்கிறாங்களா என்ற, 'டவுட்'தான் ஏற்படுது!

