PUBLISHED ON : மே 23, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: பழனிசாமி போல் ராகுல் எளிமையாக இருப்பதை சுட்டிக்காட்டி, 'இளம் தலைவர்' என, பாராட்டினேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.தி.மு.க.,வில் கவுன்சிலர்கள் கூட பந்தாவாக வரும் நிலையில், அக்கட்சி கூட்டணி வைத்துள்ள காங்கிரசின் ராகுல் எளிமையாக இருக்கிறார் என்பதை தெரிவிக்கவே, 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டேன். நான் பாராட்டியதற்கும், அ.தி.மு.க.,வுக்கும் சம்பந்தமில்லை.
----டவுட் தனபாலு: அது சரி... ஜெ., உயிரோடு இருந்திருந்தால், இப்படி பாராட்டிட்டு, வியாக்கியானம் எல்லாம் சொல்லிட்டு இருப்பீங்களா... லோக்சபா தேர்தல் முடிவுகளை பார்த்துட்டு, 'எனக்கும், அ.தி.மு.க.,வுக்கும் சம்பந்தமில்லை' என்ற முடிவை எடுக்க, இப்பவே தயாராகுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
----------
காஷ்மீரில் செயல்படும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத்: காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. இங்கு அதிக சுற்றுலா பயணியர் வருகின்றனர். அதனால் இங்குள்ள மக்கள் பயனடைகின்றனர். இது பிடிக்காமல், பாகிஸ்தான், பயங்கரவாதிகளை ஏவி விடுகிறது. பாக்., ஆட்சியாளர்கள், முதலில் தங்கள் நாட்டை கவனிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அவங்க நாட்டுல தான் கவனிக்க ஒண்ணுமே இல்லையே... பொருளாதாரம் புஸ்வாணமா போயிடுச்சு... வளர்ச்சி திட்டங்கள் தளர்ச்சியாகிடுச்சு... சும்மா இருக்க பிடிக்காம தான், சொகுசா இருக்கிற நம்மை சீண்டுறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
----------
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அமராவதி ஆற்றின் நீராதாரத்தை பறிக்கும் வகையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதை, தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தின் உரிமை பறிபோகிற விஷயத்தில், முதல்வர் கண்டன அறிக்கை வெளியிட வேண்டும் என்று, மக்கள் எதிர்பார்த்தனர். அமைச்சர் துரைமுருகனும் மென்மையான முறையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டவுட் தனபாலு: அவங்களும் என்னதான் பண்ணுவாங்க, பாவம்... காவிரியில கட்டை போடும் கர்நாடகாவுல, காங்., ஆட்சி நடக்குது... சிலந்தி ஆற்றுக்கு சிக்கல் தர்ற கேரளாவுல காம்ரேட்கள் ஆட்சி நடக்குது... ரெண்டுமே, தங்களதுகூட்டணி பங்காளிகளா இருப்பதால், தி.மு.க., அரசு அடக்கியே வாசிக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
----------

