PUBLISHED ON : மே 25, 2024 12:00 AM

பிரதமர் நரேந்திர மோடி: பஞ்சாபில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பல்வேறு தொழிற்சாலைகள் வெளியேறி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதல்வர் பகவந்த் சிங் மான் காகிதத்தில் மட்டுமே முதல்வராக இருக்கிறார். இவர் பாதி நேரம் டில்லியில் தான் வலம் வருகிறார். இவர் எப்படி பஞ்சாபை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வார்?
டவுட் தனபாலு: பஞ்சாபை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றால் மட்டும், அடுத்த தேர்தலில் அவரால் முதல்வராகிட முடியுமா...? தன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுக்கடுக்கா பிரச்னைகள் வர்றப்ப, அவர் அருகில் இருந்தால் தான், தன் முதல்வர் பதவி நிலைக்கும் என்பதை, 'டவுட்'டே இல்லாம பகவந்த் சிங் மான் தெரிஞ்சு வச்சிருக்காரு!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவர் என முதல்வர் கூறினாலும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை 6 மாதம் எங்களிடம் வழங்கினால், கஞ்சா, மது இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். மக்கள் ஓட்டு போட்டு எங்களை தேர்ந்தெடுத்தால், ஆறு மாதத்தில் கூறியதை செய்யவில்லை என்றால், நாங்களாகவே விலகி விடுவோம்.
டவுட் தனபாலு: இப்படித்தான், நீங்க கட்சி துவங்கியப்ப, 'நானும், என் குடும்பத்தாரும் எந்த அரசு பதவிக்கும் வர மாட்டோம்... என் குடும்பத்துல யாராவது அரசியலுக்கு வந்தா, என்னை மக்கள் சவுக்கால அடிக்கலாம்'னு வாக்குறுதி தந்தீங்க... அந்த மாதிரி, இந்த வாக்குறுதியும் இருக்குமோன்னு மக்களுக்கு, 'டவுட்' வருமே!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தனக்கு அடுத்துள்ள ராகுல், அரவிந்த் கெஜ்ரிவாலை விட மூன்று மடங்கு திறன் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர். 2029ம் ஆண்டு வரை, அவருக்கு ஓய்வு என்பதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. கிரிக்கெட்டில் தோனி போல, பிரதமர் மோடியும், 'ரிட்டையர்' ஆக மாட்டார்.
டவுட் தனபாலு: நேரம், காலம் பார்க்காம, உற்சாகமா உழைக்கிறவங்களுக்கு வயது என்பது வெறும் நம்பர் தான்னு சொல்லுவாங்க... அந்த வகையில, அரசியலில் ஒரு தோனியாக மோடி வலம் வருகிறார் என்பதில், 'டவுட்'டே இல்லை!

