PUBLISHED ON : மே 28, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: கடந்த மூன்றாண்டுகளில், தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தியதற்காக, தமிழக அரசை ஆன்றோரும், சான்றோரும் பாராட்டுவதாக, தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அனைத்து பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் பட்டப் படிப்பு வரை, தமிழ் மொழி கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக பள்ளிக்கல்வி வரை, தமிழை கட்டாய பயிற்று மொழியாக மாற்ற வேண்டும்.
டவுட் தனபாலு: அப்படி ஒரு சட்டத்தை கொண்டு வரலாம் தான்... ஆனா, ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்திட்டு இருக்கிற தி.மு.க., - அ.தி.மு.க., கல்வி தந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவாங்களே... அதனால, உங்க யோசனையை தி.மு.க., மட்டுமல்ல; அ.தி.மு.க.,வினரே ஏத்துக்க மாட்டாங்க என்பதில், 'டவுட்' இல்லை!
ராஜ்யசபா சுயேச்சை எம்.பி., கபில் சிபல்: 'லோக்சபா தேர்தல் முடிந்ததும், தேஜஸ்வி யாதவ் சிறைக்கு செல்வார்' என பிரதமர் மோடி கூறுகிறார். இதன் வாயிலாக சி.பி.ஐ., போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார்.
டவுட் தனபாலு: தேர்தல் பிரசாரத்தில் பேசுவதை எல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளலாமா...? அப்படி பார்த்தால், காங்கிரசின் ராகுல் கூட, 'தேர்தலில் ஜெயித்தால், பெண்களுக்கு வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவோம்'னு சொல்றாரு... அது சாத்தியமா என நீங்க, 'டவுட்' கிளப்பாதது ஏன்?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு, புதிய அணை கட்ட, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, கேரள அரசு ஜனவரி மாதமே கருத்துரு அனுப்பி இருப்பது தி.மு.க., அரசுக்கு தெரியவந்தும், லோக்சபா தேர்தலையொட்டி மறைக்கப்பட்டு உள்ளதாக செய்தி வந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக, இதுபோன்ற செயலை செய்து விட்டு, தற்போது மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவது, தும்பை விட்டு வாலை பிடிக்கும் செயல்.
டவுட் தனபாலு: இது மட்டும் தானா...? காவிரி, பாலாறு என தமிழகத்தின் உயிர்நாடியான பல பிரச்னைகள்லயும், குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டும் செயலை தான் மாநில அரசு செய்து வருகிறது... நீர்வளத்துறைக்கு துடிப்பான இளைஞர் ஒருத்தரை அமைச்சராக்கினால் தான், நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!