PUBLISHED ON : ஜூன் 01, 2024 12:00 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்தாலும், குடும்பமே நடத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை. இது விதிமீறலா, இல்லையா என்பது பற்றி, தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும். தி.மு.க., தலைமையில் இருந்து, தேர்தல் ஆணையத்திற்கு எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை. இறுதிக்கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. அதனால், காங்., எதிர்ப்பு தெரிவித்து, மனு கொடுத்துள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... தோழமை கட்சியின் அனைத்து செயல்களிலும் உடன் இருப்பதுதானே கூட்டணி தர்மம்... ஆனா, வடமாநில தேர்தல் பிரசாரத்துக்கு உங்க தலைவரை காங்., அழைக்காத கோபத்தை, இப்ப காட்டி பழிதீர்க்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தேன். இதைத் தொடர்ந்து வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் 26 வகையான சான்றிதழ்கள், பட்டா மாற்றம் உள்ளிட்ட சான்றிதழ் கோரும் மனுக்கள் மீது, 16 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என, வருவாய்த் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்; அது வரவேற்கத்தக்கது.
டவுட் தனபாலு: எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிற உங்களது கோரிக்கைக்கு அரசு செவிமடுத்திருப்பது நல்ல விஷயம் தான்.... நாளை தி.மு.க., கூட்டணிக்கு நீங்க போக வேண்டியிருந்தால், இதையே, 'என்ட்ரி கார்டா' பயன்படுத்திக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
த.மா.கா., மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர்கவுதமன்: தற்போதைய கூட்டணி கட்சியான பா.ஜ.,வின் செயல்பாடு, தேர்தல் அறிக்கை, அணுகுமுறை ஆபத்தான அரசியலுக்கான வழியாகும். பிரதமர் எவ்வாறு பேச வேண்டும் என்ற நெறிமுறை இன்றி, தன்னை கடவுளின் அவதாரமாக பேசி வருகிறார். இதுபோன்ற பா.ஜ., தலைவர்களின் பேச்சு, கூட்டணி செயல்பாடுகள் பிடிக்காததால், த.மா.கா.,வில் இருந்து விலகுகிறேன்.
டவுட் தனபாலு: உங்களை மாதிரி மூத்த தலைவர்கள் தானே, வாசனுக்கு பலம்... நீங்களே இப்படி பொசுக்குன்னு கட்சியில இருந்து விலகிட்டா, த.மா.கா.,வின் எதிர்காலம் என்னாகும் என்ற, 'டவுட்' வருதே!

