PUBLISHED ON : ஜூன் 14, 2024 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: தி.மு.க., -- காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. 2003ல் துவங்கிய இந்த கூட்டணி, எக்கு கோட்டை போல் இருக்கிறது. இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த, எவர் முயற்சி செய்தாலும், அது நிச்சயம் நிறைவேறாது.
டவுட் தனபாலு: தி.மு.க., - காங்., கூட்டணி 2003ல் இருந்து நீடிக்குதா... 2011 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், 'கூடா நட்பு, கேடாய் முடிந்தது' என முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னாரே... 2014 லோக்சபா தேர்தல்ல ரெண்டு கட்சிகளும் தனித்தனியா நின்று, படுதோல்வியை சந்திச்சதை மறந்துட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே!
தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்: தமிழகத்தின், 39 லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, 234 சட்டசபை தொகுதிகளில், 'இண்டியா' கூட்டணி, 221 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. 40க்கு 40 என, லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டசபை தேர்தலில், 200 பிளஸ் தொகுதி களில் வெற்றியை உறுதி செய்ய, கோவை முப்பெரும் விழா, கட்சியினருக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்.
டவுட் தனபாலு: லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவியது... சட்டசபை தேர்தலில், இதர மூன்று எதிர்க்கட்சி களும் கூட்டணி அமைத்து, ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரே அணியாக திரண்டு நின்றால், முதல்வரின் 200 பிளஸ் கனவு ஈடேறுவது, 'டவுட்' தான்!
விருதுநகர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன்: என் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை. ஓட்டு எண்ணிக்கை, 13வது ரவுண்டில் இருந்து, 19 ரவுண்டுக்கு நேரடியாக நடந்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் உணவு இடைவேளை நீட்டிக்கப்பட்டது. தபால் ஓட்டுகள் இரவில் எண்ணப்பட்டன. அமைச்சர்களும் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர். இதுகுறித்த விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்.
டவுட் தனபாலு: உங்களது புகார்களுக்கு தேர்தல் கமிஷன் ஒரே வாரத்தில் பதில் அளித்து, தீர்வும் சொல்லிடுமா என்ன... அப்படி தப்பி தவறி நடந்துட்டா, அது உலகின் எட்டாவது அதிசயமாகவே இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!