PUBLISHED ON : ஜூன் 15, 2024 12:00 AM

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: இன்று விடுதலை சிறுத்தைகள், மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு காரணம், அமைச்சர் பன்னீர்செல்வம் தான். அமைச்சர் பன்னீர்செல்வத்திடம், தொகுதி மாறட்டுமா என ஆலோசனை கேட்டபோது, 'மீண்டும் சிதம்பரத்திலேயே போட்டியிடுங்கள்' எனக் கூறினார். அதன் அடிப்படையில் போட்டியிட்டு, ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். எடுத்த காரியத்தை திறம்பட முடிக்கும் அமைச்சருக்கு, நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்.
டவுட் தனபாலு: உங்களுக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைக்க பன்னீர்செல்வம் தான் காரணமா... மாநில கட்சி என்ற கெத்துல, சட்டசபை தேர்தல்ல நீங்க அதிக சீட்கள் கேட்கிறப்ப தான், பன்னீர்செல்வத்துக்கு சிக்கல் காத்துட்டு இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
மஹாராஷ்டிராவில் செயல்படும், தேசியவாத காங்., சரத்பவார் அணியின் தலைவர் சரத்பவார்: லோக்சபா தேர்தலில் காட்டிய ஒற்றுமை, அடுத்த நான்கு மாதங்களுக்குள் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும். மாநிலத்தின் கட்டுப்பாட்டை பெறுவதே என் முயற்சி. இதை அடைய, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
டவுட் தனபாலு: ஏற்கனவே,மத்திய அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று பா.ஜ., கூட்டணியில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் போன்றோர் அதிருப்தியில் உள்ளனர்... அது உங்க வெற்றிக்கு உதவும் என கணக்கு போடுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம்: கடலுார் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளில், திருமாவளவனுக்கு ஒரு லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று தருவேன் என கூறினேன்; அதேபோல் பெற்றுள்ளோம். திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் போதெல்லாம் வெற்றி பெறுகிறார். தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் அவரால் இத்தொகுதி முன்னேற்றம் அடைந்துள்ளது.
டவுட் தனபாலு: 'சிதம்பரம் தொகுதியை திருமாவளவனுக்கே பட்டா போட்டு கொடுத்துட்டீங்களா'ன்னு, அந்த தொகுதியில் இருக்கும் உங்க கட்சியினர் புலம்புறாங்களே... விரக்தியில, அவங்க மாற்று கட்சிகளுக்கு தாவிடாம இருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!