PUBLISHED ON : ஜூன் 21, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் தி.மு.க., பேசி வருகிறது. வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டு, தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். விக்கிர வாண்டியில் பா.ம.க., தைரியமாக போட்டியிடவில்லை. அத்தொகுதி ஓட்டு வங்கியை அறியவே போட்டியிடுகிறது.
டவுட் தனபாலு: சிறிய கட்சியான பா.ம.க.,வே, ஆளுங்கட்சியை எதிர்த்து துணிச்சலாக களமிறங்குது... விக்கிரவாண்டி தொகுதியில உங்க கட்சிக்கு இருக்கிற ஓட்டுகளும் பா.ம.க.,வுக்கு விழுந்து, அவங்க ஓட்டு வங்கியின் பேலன்ஸ் எகிறிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தேசியவாத காங்., சரத் பவார் அணியின் தலைவர் சரத் பவார்: லோக்சபா தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் எப்படி வேலை செய்தனர் என்பதை பார்த்தேன். மாநில சட்டசபை தேர்தலில், இதேபோன்று பணியாற்றினால் ஆட்சி மீண்டும் நம் கைகளுக்கு வரும்.
டவுட் தனபாலு: லோக்சபா தேர்தலில், உங்களிடம் தோல்வி அடைந்த விரக்தியில் இருக்கும் பா.ஜ., - அஜித் பவார் - ஏக்நாத் ஷிண்டே கூட்டணி உங்களை விட கடுமையாக கள பணியில் இறங்குமே... இதனால, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்ல, அடிதடி சண்டைகளுக்கு பஞ்சமிருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்:பா.ஜ., அரசின் குறிக்கோள்வேகமாக ரயில் ஓட்ட வேண்டும் என்பதே. சிறிய ரயில் நிலையங்கள் இருக்கக்கூடாது என முடிவெடுத்து விட்டனர். அவர்களின் கர்வத்திற்காக, புல்லட் ரயில் கொண்டு வர முயல்கின்றனர். இந்தியாவிற்கு புல்லட் ரயில் தேவையில்லை. ரயில்வே துறையின் நிர்வாக சீர்கேட்டால் முன்பதிவு செய்தவர்கள், தங்களது இருக்கைகளில் பயணம் செய்ய முடியாத சூழல் உள்ளது. அதை ரயில்வே அமைச்சர் சரி செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: ஜப்பான், சீனா மாதிரி முன்னேறிய நாடாகணும்னு பிரதமர் மோடி அயராம பாடுபட்டுட்டு இருக்காரு... நீங்களோ நம்ம நாட்டுக்கு புல்லட் ரயில் வேண்டாம்னு சொல்றீங்களே... விட்டா, கரி இன்ஜின் காலத்துக்கே ரயில்வேயை கொண்டு போங்கன்னு சொன்னாலும் சொல்வீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!