PUBLISHED ON : ஜூன் 22, 2024 12:00 AM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: முதல்வர் ஆட்சிக்கு வந்தபோது, 'போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என்றார். அது என்னாச்சு. அதிகாரிகளை மாற்றினால் எல்லாம் மாறி விடுமா? கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்குவது தவறு. விக்கிரவாண்டி தேர்தலே அவர்கள் குறிக்கோள்.
டவுட் தனபாலு: கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரா, விக்கிரவாண்டி தேர்தலில் வந்து ஓட்டு போட போறாங்க... 10 லட்சம் நிவாரணம் என்பது, அரசாங்கம் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடுற முயற்சி என்பதில், 'டவுட்'டே இல்லை!
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: நீதிபதி சந்துரு அறிக்கையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும்; நீக்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அபத்த ஆலோசனைகளை அளித்துள்ளார் சந்துரு. அறிக்கையில், மாணவர்கள் நெற்றித் திலகமும், காப்புக் கயிறையும் அணிவதை தடை செய்து விட்டால், ஜாதியை ஒழித்து விடலாம் என்று அரிய கண்டுபிடிப்பை தெரிவித்துள்ளது வேடிக்கை.
டவுட் தனபாலு: இப்படித்தான், அரசு போக்குவரத்து கழகங்கள், தெருக்களின் பெயர்களில் இருந்த ஜாதி பெயர்களை எல்லாம், முன்னாள் முதல்வர் கருணாநிதி 20 - 25 வருஷங்களுக்கு முன்பே அதிரடியா நீக்கினாரு... அதன்பிறகும் ஜாதிய பேதங்கள் ஒழியலையே... அதனால, இந்த யோசனையும் எடுபடாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், அரசு இயந்திரமும், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும், எந்த அளவிற்கு சட்ட விரோத கள்ளச்சாராய கும்பலுக்கு துணை போயிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. இதற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்டம் - ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க ஆட்சியிலும், உங்க தலைவி ஜெ., ஆட்சியிலும் கூட கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளன... அப்ப எல்லாம் நீங்களும், உங்க தலைவியும் பதவி விலகி, முன்னுதாரணமா இருந்திருந்தால், 'டவுட்'டே இல்லாம இப்ப ஸ்டாலினும் ராஜினாமா பண்ணலாம்னு நீங்க தைரியமா கேட்கலாம்!