PUBLISHED ON : ஜூன் 25, 2024 12:00 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை தேவை இல்லை. உயிரிழந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்கும் தமிழக அரசு போதிய உதவிகளை செய்து வருகிறது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என கேட்பது, மலிவான அரசியல்.
டவுட் தனபாலு: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நல்ல சாராயம், அதாங்க, 'டாஸ்மாக்' மது விற்பனைக்கே உங்கப்பா ஆவேசமா எதிர்ப்பு குரல் கொடுத்தாரு... ஊர், ஊரா நடைபயணம் எல்லாம் போனாரு... அதனால, கள்ளச்சாராய சாவுகளுக்கு நீங்க சப்பை கட்டு கட்டுறதை உங்க அப்பாவே ஏத்துக்குவாரா என்பது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதுாறாக பேசிய, தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மூன்று நாளில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக டி.ஜி.பி.,க்கு, தேசிய மகளிர் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
டவுட் தனபாலு: நல்ல விஷயம் தான்... ஆனாலும், தமிழகத்தில் மகளிருக்கு எதிரான எத்தனையோ குற்றங்கள், வன்கொடுமைகள் தினமும் நடந்துட்டு தான் இருக்கு... அந்த விவகாரங்களிலும் என்ன நடவடிக்கை எடுத்தீங்கன்னு இதே மாதிரி, 'கிடுக்கிப்பிடி' போட்டால், தேசிய மகளிர் கமிஷனை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!
இந்திய கம்யூ., மாநில செயலர்முத்தரசன்: கள்ளக்குறிச்சியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டதை பயன்படுத்தி கள்ளச்சாராய விற்பனையை அதிகரித்துள்ளனர். இதுவும் பல உயிர்கள் பலியானதற்கு காரணம். கடலுக்கு செல்லும் மீனவர்கள் இறந்தால், 3 லட்சம் ரூபாய் மட்டும் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்குவதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: கடலுக்குள்ள போகும் மீனவர்கள் இறப்புக்கு அரசு பொறுப்பில்லையே... ஆனா, கள்ளச்சாராய சாவுகள் என்பது, அரசின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாச்சே... அதை மறைக்கவே, 10 லட்சத்தை குடுத்து, பாதிக்கப்பட்டவங்க வாயை அடைக்கிறாங்க என்பது, மூத்த அரசியல் தலைவரான தங்களுக்கு தெரியாதா என்ற, 'டவுட்' எழுதே!