PUBLISHED ON : ஜூலை 03, 2024 12:00 AM

அ.தி.மு.க., பொதுச் செயலர்பழனிசாமி: இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில், மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. சட்டத்தின் பெயர்கள், சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது குழப்பமாக இருப்பதால் ஏற்கத்தக்கதல்ல. இது, அப்பட்டமான ஹிந்தி திணிப்பு. சட்டத்தின் பெயர்களை, மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: இந்த சட்டங்களை எதிர்த்து, ஆளுங்கட்சியான தி.மு.க., வக்கீல்கள்அணி போராட்டத்தை அறிவிச்சிடுச்சு... உங்க அணியும் களத்துல குதிச்சுட வேண்டியதுதானே... மத்திய அரசுக்கு எதிரா போராட்டம் நடத்தினா, இ.டி.,யும் ஐ.டி.,யும் வீடு தேடி வருமோன்னு தயங்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
ஆந்திர மாநில காங்., தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா: மத்தியில் தே.ஜ., கூட்டணி அரசில்,கிங் மேக்கராக இருந்து கொண்டு, ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கை குறித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு வாய் திறக்காதது ஏன்? மவுனத்திற்கான காரணம் குறித்து, அவர் மக்களுக்கு விளக்க வேண்டும்.
டவுட் தனபாலு: என்னமோ, சந்திரபாபு நாயுடுதான் மோடியை பிரதமர் ஆக்கியது போல பேசுறீங்களே... அவரது உயரம், அவருக்கு தெரியும் என்பதால் தானே, சபாநாயகர் பதவியை தன் கட்சிக்கு கேட்காம, நாயுடுகாரு அமைதியா இருந்துட்டாரு... அவரை கொம்பு சீவி விட பார்க்கும் உங்க முயற்சி பலிக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜுனன்: விக்கிரவாண்டி தொகுதியில், 33 அமைச்சர்கள் பண பலத்தோடும், ஆட்சி அதிகாரத்தோடும் வலம் வருகின்றனர். தி.மு.க.,விற்கு தேர்தல்பணியாற்றுமாறு அ.தி.மு.க.,வினரை மிரட்டுகின்றனர். அதேபோல, பா.ம.க.,வினரும் தொந்தரவு செய்கின்றனர். அனைத்து கிராமங்களிலும் இந்த நிலை தொடர்கிறது.
டவுட் தனபாலு: அது சரி... துாங்கும்போது கூட கால் ஆட்டியபடியே துாங்கணும்னு சொல்லுவாங்க... சும்மா மோட்டு வளையை பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருந்தா, இப்படித்தான் போறவங்க, வர்றவங்க எல்லாம் கூலிக்கு மாரடிக்க கூப்பிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!