PUBLISHED ON : ஜூலை 27, 2024 12:00 AM

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: டில்லி யில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து பேசினேன். காவிரி, கடல் ஆழம் கண்டவர் கூட தீர்வு காண முடியாத பிரச்னை. முல்லை பெரியாறு அணையும் பிரச்னை. இந்த பிரச்னைகளை தெளிவாக கூறினோம். எல்லாவற்றையும் அமைச்சர் கேட்டார். ஆனால், அவர் அளித்த பதில் தான் எங்களுக்கு எதுவும் புரியவில்லை. 'அச்சா அச்சா...' என்று தான் பேசுகிறார்.
டவுட் தனபாலு: நீங்களும் ஹிந்தி கத்துக்க மாட்டீங்க... அவங்களும் ஆங்கிலம் கத்துக்க மாட்டாங்க... அப்படியே ஆங்கிலம் தெரிஞ்சாலும், உங்களை வெறுப்பேற்றவே ஹிந்தியில் பேசுவாங்க... காவிரி பிரச்னை மாதிரி, இந்த மொழி பிரச்னையும் எத்தனை மாமாங்கம் ஆனாலும் தீராது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக, முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான ஹசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஜின்னாவை இந்த பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே, கடந்த ஆறு மாதங்களாக இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்திருக்கிறார் ஸ்டாலின்.
டவுட் தனபாலு: நீங்க சொல்வதும் சரிதான்... அதே மாதிரி, உங்க கட்சி தலைமையில் நடக்கிற மத்திய அரசில் கூட, உங்களுக்கு வேண்டிய அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றாலும், பணி நீட்டிப்பு கொடுத்து, பக்கத்துலயே வச்சுக்குறாங்களே... அதுவும் தப்பு தான் என்பதில் தங்களுக்கு ஏதும், 'டவுட்' இருக்குதா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக மக்கள் இன்னும் இரண்டு மாதத்தில் இடஒதுக்கீடு குறித்து பேசப் போகின்றனர். ஊமை ஜனங்கள் பேசப் போகின்றனர். நாடே கிடுகிடுக்க, நாடே ஸ்தம்பிக்க, ஊமை ஜனங்களா இருந்த மக்களுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல், தைரியம் வந்தது என்று மற்ற வங்க பேசப் போகின்றனர். ஆட்சியில் இருக்கிறவர்களின் குடை சாய, கோலோச்சியவர்கள் போதுமடா சாமி என்று விட்டு ஓட, ஊமை ஜனங்களுக்கு தைரியம் வர, அவர்கள் பேசப் போகின்றனர். அப்போது இந்த நாடு தாங்காது.
டவுட் தனபாலு: மத பிரசங்கத்துல பேசுவது போல இப்படி ஆவேசமாக பேசுறாரே... 'நம்ம டாக்டர் என்னதான் சொல்ல வர்றாரு'ன்னு அவரது கட்சியினரே குழம்பி தவிப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!