PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM

சிவகங்கை, காங்., - எம்.பி., கார்த்தி: புதுக்கோட்டையில் ஜூலை, 19 மற்றும், சிவகங்கையில், 20ம் தேதி நடந்த, காங்., கூட்டத்தில், '2026ல் அமையும் தமிழக அமைச்சரவையில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற வேண்டும்' என, நான் பேசியிருந்தேன். இதற்கு எதற்காக, ஜூலை 26ல் என்னை கண்டித்து, காங்., மூத்த தலைவர் இளங்கோவன் பேட்டி தருகிறார் என தெரியவில்லை.
டவுட் தனபாலு: அது சரி... 'ஈரோடு இடைத்தேர்தலில், 100 சி செலவழித்து, உங்களை ஜெயிக்க வச்சிருக்கோம்... கார்த்தி பேச்சை கேட்டு, இன்னும் அமைதியா இருப்பது நியாயமா...' என, அவரை யாரும் உசுப்பி விட்டிருப்பாங்களோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?
பத்திரிகை செய்தி: 'ஆல்கஹால்' அளவு குறைவாக இருப்பதால், 'வீரன்' பிராந்தி உள்ளிட்ட, நான்கு வகை மது பானங்களை விற்க, கடை ஊழியர்களுக்கு, 'டாஸ்மாக்' நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடைகளில், அவை இருப்பு இருந்தால், அவற்றை குடோன்களுக்கு திருப்பி அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
டவுட் தனபாலு: அதானே... 150 ரூபாய் கொடுத்து, குவார்ட்டரை வாங்கி குடிக்கிறவங்களுக்கு, தரமான சரக்கு தர முடியாட்டியும் பரவாயில்லை... நிறைவான போதையை தரணும்னு நினைக்கிற அரசாங்கத்தின் எண்ணத்தை நினைச்சா, புல்லரிக்குது போங்க... அந்த சரக்குகளை திரும்ப வாங்கி, 'எக்ஸ்ட்ரா கிக்' சேர்த்து, இறக்குமதி பண்ணிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழக மின் வாரியத்தில் மின் இயக்கம், மின் தொடரமைப்பு கழகம், மின் பகிர்மானம், மின் உற்பத்தி, மின் திட்டங்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் இயக்குனர் பதவிகள் காலியாக உள்ளன. தலைமை பொறியாளர்களாக இருப்பவர்கள், இயக்குனர்கள் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். காலியாக உள்ள இயக்குனர்கள் பதவிக்கு, நேர்மையான மற்றும் திறமையான நபர்களை விரைந்து நியமிக்குமாறு, அரசுக்கு பொறியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
டவுட் தனபாலு: தமிழக அரசுல நேர்மையான, திறமையான அதிகாரிகளுக்கு பஞ்சம் வந்துடுச்சா என்ன... ஒரு வேளை, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை நியமிக்க, ஆட்சியாளர்கள் காலம் கடத்துறாங்களா என்ற, 'டவுட்' தான் வருது!