PUBLISHED ON : ஆக 01, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா: சென்னையில் வெள்ள நீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 5,000 கோடி ரூபாய்க்கு செலவு செய்த கணக்கை தமிழக அரசு வழங்காத வரை,தமிழகத்திற்கு தம்பிடி காசை கூட மத்திய அரசு வழங்காது.
டவுட் தனபாலு: நீங்க, பா.ஜ.,வில் இருந்தாலும், மத்திய அரசின் எந்த பதவியிலும் இல்லை... ஏற்கனவே, மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்துவதாக தி.மு.க., அரசின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துற விதமா, உங்களது இந்த கருத்து உள்ளது என்பதில், 'டவுட்'டே இல்லை!
த.மா.கா., தலைவர் வாசன்: தி.மு.க., ஆட்சியில், நாள்தோறும் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. இந்த சமூக விரோத செயல்களுக்கு அடிப்படைக் காரணமாகஇருப்பது, போதை பொருள் கலாசாரம். குறிப்பாக, போதை பொருட்கள் பள்ளி, கல்லுாரி வளாகத்தின் அருகிலும், பொது வெளியிலும் மிக எளிதாக கிடைக்கிறது.
டவுட் தனபாலு: 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'னு பெரியவங்க சொல்வாங்க... இப்ப, டாஸ்மாக் கடைகள் இல்லாத ஊரா பார்த்து குடியேறலாம்னு பார்த்தா, சந்திர மண்டலத்துல தான் இடம் கிடைக்கும் போல... போதை பொருட்களை ஒழிக்காத வரைக்கும், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இருதரப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற சிவகுமார் என்ற ஆசிரியரின் தலையில், ஒரு மாணவர் அரிவாளால் வெட்டியதாக வெளியான செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது. கடவுளுக்கும் மேல் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள். ஆனால், சமீபகாலமாக ஆசிரியர்கள், மாணவர்களால் தாக்கப்படும், அவமதிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. அனைவருக்கும் கவலை அளிக்கும் இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
டவுட் தனபாலு: முன்னொரு காலத்துல, பள்ளிகள்ல நன்னெறி வகுப்பு என்ற பாடவேளையே உண்டு... படிப்படியா அதற்கு மூடுவிழா நடத்திட்டாங்க... பற்றாக்குறைக்கு கத்தி, கபடாக்களை துாக்குறவனை ஹீரோவாக காட்டும் இன்றைய கேடு கெட்ட சினிமாக்களும் பள்ளி மாணவர்களை பட்டா கத்தி துாக்க வைக்கிறது என்பதில், 'டவுட்'டே இல்லை!