PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM

துாத்துக்குடி தொகுதி தி.மு.க., - எம்.பி., கனிமொழி: ரயில் நிலையங்களுக்கு சென்று டிக்கெட் எடுக்க முடியவில்லை. அங்கேயும் ஹிந்தியை திணித்து விட்டது மத்திய அரசு. மொழி கொள்கையை வைத்து, தி.மு.க., நாடகம் ஆடுவதாக கூறி விமர்சிக்கின்றனர். மொழி போராட்டத்திற்காக, உயிரை விட்டவர்கள் திராவிட இயக்கத்தவர்.
டவுட் தனபாலு: ஹிந்தி திணிப்பை எதிர்த்து, திராவிட இயக்கத்தினர் சிலர் உயிரை விட்டது உண்மை தான்... ஆனாலும், அப்பாவி தொண்டர்கள் தான் உயிரை இழந்தாங்களே தவிர, அவங்களை துாண்டிவிட்ட தலைவர்கள், 'சேப்டி'யா தான் இருந்தாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
உ.பி.,யில் இயங்கும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சிவ்பால் யாதவ்: ராகுலின் ஜாதி பற்றி அனுராக் தாக்குர் தனிப்பட்ட தாக்குதல் நடத்தியுள்ளார். பேசியவர் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி., என்பதால், அவர் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. எதிர்க்கட்சியினர் இப்படி பேசியிருந்தால், பதவி நீக்கம் செய்திருப்பர்.
டவுட் தனபாலு: உ.பி.,யில் ஜாதியை வைத்து கட்சி நடத்தும் நீங்க, ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியப்படணும்... ராகுல் கூட இதை பெரிதுபடுத்தாத சூழல்ல, நீங்க எல்லாம் ஓவராக குரல் கொடுப்பது, பா.ஜ.,வுக்கு எதிரான பக்கா அரசியல் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'ஜாதிவாரி மக்கள்தொகை விபரங்கள் இல்லாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த போவதில்லை. மத்திய அரசும் நடத்த வாய்ப்பு இல்லை. வன்னியர்களால் வளர்ந்த தி.மு.க., இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம், வன்மத்தால் உள் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. இதை பாட்டாளி மக்கள் நன்கறிவர். காலம் வரும்போது, நன்றி மறந்த தி.மு.க.,வுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவர்.
டவுட் தனபாலு: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கும், பா.ம.க.,வுக்கும் தான் நேரடி போட்டி நிலவியது... அந்த தேர்தலின் தீர்ப்பே, மக்கள் யாருக்கு பாடம் புகட்டினாங்க என்பதை, 'டவுட்'டே இல்லாம விளக்கிடுச்சே!